அணைக்கட்டில் நடந்த பொய்கை வாரச்சந்தை ஏலத்தில் பொதுமக்கள்-ஏலதாரர்கள் மோதல்


அணைக்கட்டில் நடந்த பொய்கை வாரச்சந்தை ஏலத்தில் பொதுமக்கள்-ஏலதாரர்கள் மோதல்
x
தினத்தந்தி 29 March 2018 4:30 AM IST (Updated: 29 March 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

பொய்கை வாரச்சந்தை ஏலத்தில் பொதுமக்களுக்கும், ஏலதாரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பு நடந்தது. இதனால் ஏளம் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

அணைக்கட்டு,

வேலுரை அடுத்த பொய்கையில் செவ்வாய்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பிப்ரவரி மாதம் நடைப்பெற இருந்த ஏலம் தள்ளி வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அடிப்படை வசதிகள் செய்ய ரூ.34 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2018-2019-ம் ஆண்டிற்கான ஏலத்தை 28-ந் தேதி நடத்தலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.

அதன்படி நேற்று பகல் 12 மணிக்கு அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஏலம் நடத்தப்பட்டது. ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மோகன் தலைமை தாங்கினார். அலுவலக மேலாளர்கள் கோபி, சாந்தி மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். ஏலம் எடுக்க பொய்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் தயார் நிலையில் இருந்தனர். ரூ.50 லட்சத்தில் தொடங்கி ரூ.1 கோடியே 22 லட்சத்து 30 ஆயிரம் வரை ஏலம் கேட்டனர்.

ஏலம் நடப்பதை பார்க்க பொய்கையை சேர்ந்த பொதுமக்கள் கூட்ட அரங்கிற்கு வெளியே நின்றிருந்தனர். ரூ.1 கோடியே 22 லட்சத்து 30 ஆயிரத்திற்கு ஏலம் கேட்கும்போது திடீரென பொதுமக்கள் அரங்கிற்குள் புகுந்தனர். அவர்கள் ஆணையாளரையும், மேலாளரையும் ஏலத்தை நிறுத்தும்படி கூறினர்.

மேலும் ஏலம் கேட்ட 2 பிரிவினரையும் பார்த்து சந்தையில் வியாபாரம் செய்பவர்களிடம் ஆயிரம் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை வரி வசூல் செய்வதற்காகத்தான் இவ்வளவு தொகைக்கு ஏலம் கேட்கிறீர்கள். உங்களுடைய கவுரவத்திற்காக கடந்த ஆண்டு ரூ.80 லட்சத்திற்கு போன ஏலத்தை இப்போது போட்டி போட்டுக்கொண்டு ரூ.1 கோடியே 22 லட்சத்து 30 ஆயிரத்திற்கு கேட்கிறீர்கள். எனவே ஏலத்தை நிறுத்துமாறு இரு தரப்பினரையும் கேட்டுக்கொண்டனர்.

இதனால் ஏலதாரர்களுக் கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனே போலீசார் பொதுமக்களை தடுத்து நிறுத்தி வெளியேற்றினர். இதனால் ஒரு மணி நேரம் ஏலம் நிறுத்தப்பட்டது.

உடனே ஏலதாரர்கள் இந்த ஆண்டு அரசாங்கமே வாரச்சந்தையை நடத்தட்டும் என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினர். இதனால் ஏலத்தை முடிக்க முடியாமல் அதிகாரிகள் என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நின்றனர்.

இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story