சிவகாசியில் கடுமையான வெயில்: மின் வெட்டாலும் அவதி


சிவகாசியில் கடுமையான வெயில்: மின் வெட்டாலும் அவதி
x
தினத்தந்தி 29 March 2018 3:00 AM IST (Updated: 29 March 2018 2:07 AM IST)
t-max-icont-min-icon

கந்தகபூமியான சிவகாசியில் கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் கடுமையாக உள்ளது.

சிவகாசி,

கோடைகாலம் தொடங்கி தமிழகம் முழுவதும் பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கடந்த சில நாட்களாக எப்போதும் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் மிகக்கடுமையாக உள்ளது. சிவகாசியை கந்தகபூமி என்று அழைப்பது வழக்கம். அந்த சீதோஷன நிலையை கொண்டு தான் இங்கு பட்டாசு, தீப்பெட்டி, அச்சகங்கள் இயங்கி வருகிறது. இருந்தாலும் கடந்த காலங்களில் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. காலை 8 மணிக்கே வெயிலின் தாக்கம் தொடங்கி விடுகிறது. இது மாலை 6 மணியை கடந்தும் தொடர்கிறது. இதனால் வீட்டில் இருந்து பல்வேறு பணிகளுக்காக வெளியே வருவோர் பெரும் சிரமத்துக்குள்ளாகிறார்கள். பகல் நேரங்களில் வெப்பக் காற்றும் வீசுகிறது.

இளநீர், பழச்சாறு, கரும்புச்சாறு, மோர், கம்பங்கூழ், குளிர்பானங்கள், பதனீர், நுங்கு ஆகியவை விற்பனை செய்யும் இடங்களை தேடிச் செல்லும் நிலை அதிகரித்துள்ளது.

வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகமாக இருப்பதால் அவசியம் இருந்தால் மட்டும் வெளியே வெளியே வருகிறார்கள். அவ்வாறு வருபவர்கள் கூட சாலையோரம் உள்ள கடைகளுக்கு சென்று குளிர்ச்சியான பொருட்களை வாங்கி அருந்திவிட்டு தான் மீண்டும் வீடுகளுக்கு திரும்புகிறார்கள். இதனால் சாலைகளில் புதிய தற்காலிக கடைகள் உருவாகி உள்ளது.

பல இடங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் தண்ணீர் பந்தல்களை திறந்து வருகிறார்கள். இன்னும் 60 நாட்கள் முழுமையாக கோடைகாலம் உள்ள நிலையில் தற்போது உள்ள வெயிலை சமாளிக்க பொதுமக்கள் பெரும் திண்டாடும் நிலையில் மாவட்ட நிர்வாகமும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

ஏற்கனவே சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் போதிய நிலத்தடி நீர் இல்லாததால் பொதுமக்கள் குடிநீருக்காக ஒரு பெருந்தொகை செலவு செய்து தேவையான தண்ணீரை விலை கொடுத்து வங்கி பயன்படுத்தி வருகிறார்கள். இது போல் தண்ணீர் வழங்கும் வாகனங்களை சுகாதார அதிகாரிகள் ஆய்வு செய்து தண்ணீர் தரமானதுதானா என்று கண்டறிய வேண்டும்.

சிவகாசி பகுதியில் ஏற்கனவே அதிகஅளவில் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக எந்தவித அறிவிப்பும் இன்றி நீண்ட நேரம் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. குறிப்பாக கடந்த திங்கட்கிழமை காலை 10 மணிக்கு மின்சாரம் நிறுத்தப்பட்டு, மாலை 6 மணிக்கு மீண்டும் வழங்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வீட்டில் உள்ள குழந்தைகள், நோயாளிகள் என பலர் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள்.

அதே போல் வேலைக்கு வந்த தொழிலாளர்கள் மின்சாரம் ஓரிரு மணி நேரத்தில் மீண்டும் வந்து விடும், பணிகளை தொடங்கலாம் என்று நினைத்து இருந்தனர். ஆனால் மாலை 6 மணிக்கே மின்சாரம் கொடுக்கப்பட்டதால் அன்று ஒரு நாள் முழுவதும் வேலைக்கு வந்து சம்பளம் இல்லாமல் சென்ற பரிதாப சம்பவம் நடைபெற்றது.

இதுபோல் சம்பவங்கள் இனி வரும் காலத்தில் நடக்காமல் இருக்க மின்துறை போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடைகாலங்களில் இரவு நேரங்களில் வீடுகளில் மின்சார தேவை அதிகமாக இருக்கிறது என்பதற்காக அதை சரி செய்து கொள்ள மின்சார வாரியம் பகல் நேரங்களில் மின் நிறுத்தம் செய்வது ஏற்புடையது அல்ல என்று பலரும் தெரிவித்தனர். 

Next Story