கொடைக்கானலில் ஆயுத பயிற்சி பெற்ற வழக்கில் கைது: திண்டுக்கல் கோர்ட்டில் பெண் மாவோயிஸ்டு ஆஜர்


கொடைக்கானலில் ஆயுத பயிற்சி பெற்ற வழக்கில் கைது: திண்டுக்கல் கோர்ட்டில் பெண் மாவோயிஸ்டு ஆஜர்
x
தினத்தந்தி 29 March 2018 4:45 AM IST (Updated: 29 March 2018 2:08 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் ஆயுத பயிற்சி பெற்ற வழக்கில் பெண் மாவோயிஸ்டு கைது செய்யப்பட்டு திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கோர்ட்டு வளாகத்தில் அவர் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள வடகவுஞ்சி மலைப்பகுதியில், கடந்த 2008-ம் ஆண்டு மாவோயிஸ்டுகள் பதுங்கி இருந்து ஆயுத பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த அதிரடி படை போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது, நடந்த துப்பாக்கி சூட்டில் நவீன்பிரசாத் என்பவர் கொல்லப்பட்டார். பெண் மாவோயிஸ்டுகள் உள்பட 7 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த கொடைக்கானல் போலீசார் தப்பி ஓடியவர்களை தேடி வந்தனர். இந்தநிலையில், தப்பி சென்ற மாவோயிஸ்டுகள் ரஞ்சித், நீலமேகம், கண்ணன், ரீனா ஜாய்ஸ்மேரி, காளிதாஸ், பகத்சிங், செண்பகவல்லி என்ற கனிமொழி ஆகிய 7 பேரை தமிழக மற்றும் கேரள போலீசார் வெவ்வேறு இடங்களில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களில் காளிதாஸ், செண்பகவல்லி ஆகியோரை தவிர மற்ற 5 பேரும் கொடைக்கானல் வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செண்பகவல்லியை கொடைக்கானல் வழக்கில் கைது செய்ய அனுமதி கேட்டு, திண்டுக்கல் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் மனுதாக்கல் செய்தனர். அதற்கு மாஜிஸ்திரேட்டு பாலமுருகன் அனுமதி அளித்து உத்தரவிட்டார். அதன்படி, கொடைக்கானல் போலீசார் சென்னை புழல் சிறையில் உள்ள செண்பகவல்லியை கொடைக்கானலில் ஆயுத பயிற்சி பெற்ற வழக்கில் கைது செய்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து, அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு போலீசார் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஏப்ரல்) 11-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். பின்னர் அவரை மீண்டும் சென்னை புழல் சிறையில் அடைப்பதற்காக போலீசார் வெளியே அழைத்து வந்தனர்.

கோர்ட்டுக்கு வெளியே வந்ததும், பத்திரிகையாளர்களை பார்த்தபடி செண்பகவல்லி கோஷமிட்டார். அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்டம் மற்றும் இந்து அமைப்புகளை தடை செய்ய வேண்டும். மனிதநேயத்தை காப்பாற்ற வேண்டும் என்று கோஷமிட்டபடி வந்தார். அவரை போலீசார் வேனில் ஏற்றி சென்னை புழல் சிறைக்கு கொண்டு சென்றனர். 

Next Story