தமிழகத்தில் இந்த ஆண்டு 250 பள்ளிக்கூடங்கள் தரம் உயர்த்தப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி


தமிழகத்தில் இந்த ஆண்டு 250 பள்ளிக்கூடங்கள் தரம் உயர்த்தப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
x
தினத்தந்தி 29 March 2018 3:45 AM IST (Updated: 29 March 2018 2:22 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் இந்த ஆண்டு 250 பள்ளிக்கூடங்கள் தரம் உயர்த்தப்படும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழக அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் புகைப்பட கண்காட்சி ஈரோடு பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, சிவசுப்பிரமணி, ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்ட னர். அதைத்தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2 வழிச்சாலைகள் 4 வழிச்சாலைகளாக மாற்றப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக ஈரோட்டில் இருந்து நீலகிரி வரை 4 வழிச்சாலை அமைக்க பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. அத்திக்கடவு -அவினாசி திட்டம் 70 ஆண்டுகால திட்டம் ஆகும். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரூ.1,789 கோடியில் திட்டம் தீட்டப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு 100 பள்ளிக்கூடங்கள் உயர்நிலை பள்ளிக்கூடங்களாகவும், 150 உயர்நிலைப்பள்ளிக்கூடங்கள் மேல்நிலைப்பள்ளி கூடங்களாகவும், தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு 100 பள்ளிக்கூடங்கள் மேல்நிலை பள்ளிக்கூடங்களாகவும், 150 பள்ளிக்கூடங்கள் உயர்நிலை பள்ளிக்கூடங்களாகவும் மொத்தம் 250 பள்ளிக்கூடங்கள் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பள்ளி கல்வித்துறைக்கு கடந்த ஆண்டு ரூ.26 ஆயிரத்து 932 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.27 ஆயிரத்து 205 கோடியே 88 லட்சமும், உயர் கல்விக்காக ரூ.4 ஆயிரத்து 342 கோடியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. வேறு எந்த மாநிலங்களிலும் கல்வித்துறைக்காக இந்த அளவுக்கு நிதி ஒதுக்கப்பட்டது கிடையாது.

தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்காக 312 இடங்களில் மையங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்களில் 70 ஆயிரத்து 410 மாணவ -மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இதில் தேர்வு செய்யப்படும் 4 ஆயிரம் மாணவ -மாணவிகளுக்கு 8 கல்லூரிகளில் தொடர்ந்து 25 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.4 கோடியே 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாணவ- மாணவிகளுக்காக தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் பயிற்சி மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட நூலக ஆணைக்குழு மற்றும் பொது நூலகத்துறை சார்பில் ஈரோடு சம்பத் நகர் நவீன நூலகத்தில் அமைக்கப்பட்டு இருந்த பயிற்சி மையத்தினை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் திறந்து வைத்து, பயிற்சி மையத்திற்கு தேவையான புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார்கள்.

விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார், முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், அ.தி.மு.க. அவைத்தலைவர் பி.சி.ராமசாமி, பகுதி செயலாளர்கள் மனோகரன், கேசவமூர்த்தி, மாவட்ட நூலக அலுவலர் மாதேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story