உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு 5 பெண்கள் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி


உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு 5 பெண்கள் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 29 March 2018 4:15 AM IST (Updated: 29 March 2018 2:29 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு 5 பெண்கள் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆத்தூர்,

ஆத்தூர் அருகே மஞ்சினி கிராமத்தை சேர்ந்தவர்கள் ராமலிங்கம், ராமகிருஷ்ணன். இவர்கள் இருவரும் விவசாயிகள். இவர்களுக்கு சொந்தமான நிலம், கடந்த 1986-ம் ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் கையகப்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து விவசாயிகள் ராமலிங்கம், ராமகிருஷ்ணன் ஆகியோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்தநிலையில் ஆத்தூர் ஆதிதிராவிடர் நல தாசில்தார் வெங்கடேஸ்வரன் மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று முன்தினம் விவசாய நிலம் இருந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டு அந்த நிலத்தை விட்டு செல்லுமாறு ராமலிங்கம், ராமகிருஷ்ணன் தரப்பினரிடம் கூறினர்.

இதனால் ஆத்திரமடைந்த ராமலிங்கம், அவரது மனைவி மலர்விழி, மகன் வெங்கடேஷ், அவரது மனைவி பவித்ரா, இன்னொரு மகன் ரஞ்சித், விவசாயி ராமகிருஷ்ணன், அவரது மனைவி அஞ்சலை, ராமகிருஷ்ணனின் தம்பி பொன்னுசாமி, அவரது மனைவி பூவாயி, இன்னொரு தம்பி ஜெயராமன், அவரது மனைவி சாந்தி உள்பட 12 பேர் நேற்று காலை ஆத்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் தாங்கள் கொண்டு வந்த மண்எண்ணெய் கேனில் இருந்த மண்எண்ணெயை தங்கள் தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்று ஆவேசமாக கோஷமிட்டனர். மேலும் தங்கள் நிலத்தை கையகப்படுத்தக்கூடாது என்றும் வலியுறுத்தினர். இது குறித்து தகவல் அறிந்ததும், ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அமிர்தலிங்கம், ரவிக்குமார், பெரியசாமி மற்றும் போலீசார் விரைந்து வந்து மண்எண்ணெய் ஊற்றி இருந்தவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர்.

இதில் சமாதானமடைந்த 5 பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஆத்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் மனுகொடுத்தனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு வேறுபணிக்காக வந்த ஆத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. சின்னதம்பியிடமும், அந்த குடும்பத்தினர் கோரிக்கை மனுகொடுத்து விட்டு அங்கிருந்து சென்றனர். 

Next Story