கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்தக்கோரி துணை பதிவாளர் அலுவலகத்தை பூட்ட முயன்ற தி.மு.க.வினர்


கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்தக்கோரி துணை பதிவாளர் அலுவலகத்தை பூட்ட முயன்ற தி.மு.க.வினர்
x
தினத்தந்தி 29 March 2018 4:00 AM IST (Updated: 29 March 2018 2:32 AM IST)
t-max-icont-min-icon

கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்தக்கோரி, திண்டுக்கல் துணை பதிவாளர் அலுவலகத்தை தி.மு.க.வினர் பூட்டு போட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்,

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 486 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதில், 137 சங்கங்களுக்கு முதல்கட்டமாக வருகிற 2-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 26-ந்தேதி நடந்தது.

நேற்று முன்தினம் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, அன்றைய தினம் மாலை 5 மணிக்கு தகுதியுள்ள வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சாணார்பட்டி அருகே உள்ள வி.மேட்டுப்பட்டி கூட்டுறவு வங்கி உள்பட பல்வேறு சங்கங்களில் தகுதியுள்ள வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்படவில்லை. இதுதொடர்பாக, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விளக்கம் கேட்பதற் காக வி.மேட்டுப்பட்டி கூட்டுறவு வங்கிக்கு தி.மு.க.வினர் சென்றனர்.

ஆனால், அங்கு தேர்தல் நடத்தும் அலுவலர் இல்லாததால் செயலர் சுப்பிரமணியை வங்கியின் உள்ளே வைத்து பூட்டினர். மேலும், பல்வேறு சங்கங்களில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செயல்படுவதாக கூறி சாலை மறியல், முற்றுகை போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்தக்கோரி திண்டுக்கல் நேருஜி நகரில் உள்ள கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் அலுவலகத்துக்கு எம்.எல்.ஏ.க்கள் செந்தில்குமார், ஆண்டி அம்பலம் ஆகியோர் தலைமையில் தி.மு.க. தொண்டர்கள் நேற்று குவிந்தனர். ஆனால், துணை பதிவாளர் அங்கு இல்லாததால் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், துணை பதிவாளர் உடனடியாக வரவில்லையெனில் அலுவலகத்தை பூட்டு போடப்போவதாகவும் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், துணை சூப்பிரண்டு சிகாமணி ஆகியோர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர், அங்கிருந்து புறப்பட்ட செந்தில்குமார் எம்.எல்.ஏ மற்றும் அர.சக்கரபாணி எம்.எல்.ஏ. ஆகியோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு, இணை பதிவாளர் பழனிவேலுவை சந்தித்து தேர்தலை முறையாக நடத்தக்கோரி வலியுறுத்தினர். 

Next Story