நெய்வேலி அருகே உடல் கருகிய நிலையில் உயர்அழுத்த மின் கம்பத்தில் பிணமாக தொங்கிய என்ஜினீயர்


நெய்வேலி அருகே உடல் கருகிய நிலையில் உயர்அழுத்த மின் கம்பத்தில் பிணமாக தொங்கிய என்ஜினீயர்
x
தினத்தந்தி 29 March 2018 3:30 AM IST (Updated: 29 March 2018 2:32 AM IST)
t-max-icont-min-icon

நெய்வேலி அருகே உடல் கருகிய நிலையில் உயரழுத்த மின் கம்பத்தில் என்ஜினீயர் பிணமாக தொங்கினார். வேலை நடப்பது தெரியாமல் ஊழியர் மின் இணைப்பு கொடுத்ததால் இந்த விபரீத சம்பவம் நடந்தது.

நெய்வேலி,

கடலூர் மாவட்டம் கம்மாபுரம் அடுத்த ஓட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர் தவமணி மகன் சரத்குமார்(வயது 25). சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ. படித்து முடித்து விட்டு, வீட்டில் இருந்தபடி வேலை தேடி வந்தார். இந்த நிலையில் சரத்குமார் கொம்பாடிக்குப்பம் கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்து, கடலூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணியில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனம் ஒன்றில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 2 ஆண்டுகளாக கூலி வேலை செய்து வந்தார்.

நேற்று காலை சரத்குமார் வழக்கம்போல் சக தொழிலாளர்களுடன் நெய்வேலியை அடுத்த வெளிக்கூனங்குறிச்சி செல்லும் கிராம சாலையில் இடமாற்றம் செய்து, நடப்பட்ட கம்பத்தில் ஏறி மின் கம்பி இணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஊ.மங்கலம் துணை மின் நிலைய ஊழியர் ஒருவர், சரத்குமாரிடம் ரோமாபுரி- வெளிக்கூனங்குறிச்சி சாலையில் செல்லும் 11 கிலோ வாட் உயர்அழுத்த கம்பத்தில் மின் இணைப்பு கொடுக்க வேண்டும் என்று கூறி அழைத்து சென்றார். பின்னர் மின்ஊழியர் ஊ.மங்கலம் துணை மின் நிலையத்தில் இருந்து உயர் அழுத்த மின் பாதையின் இணைப்பை துண்டித்தார்.

இதையடுத்து சரத்குமார் மதியம் 12 மணியளவில் உயர்அழுத்த மின் கம்பத்தில் ஏறி, கம்பியை இணைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அந்த சமயத்தில் துணை மின் நிலையத்தில் இருந்த ஊழியர் ஒருவர், பணி நடைபெறுவது தெரியாமல் உயர் அழுத்தம் செல்லும் மின் பாதைக்கான சுவிட்சை போட்டார். அப்போது மின்கம்பத்தில் அமர்ந்து பணியாற்றிய சரத்குமார் மீது மின்சாரம் பாய்ந்து இதில் உடல் தீப்பற்றி எரிந்தபடி மின்கம்பத்திலேயே பிணமாக தொங்கினார்.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த மின் ஊழியர், இதுபற்றி ஊ.மங்கலம் துணை மின் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதுபற்றி அறிந்த போலீசார் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தினர். 

Next Story