புத்தக வடிவிலான பழைய பஸ் பாஸ் வழங்க கோரி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
புத்தக வடிவிலான பழைய பஸ் பாஸ் வழங்கக்கோரி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சென்னை பல்லவன் இல்லம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை,
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சென்னை மாநகர பஸ்களில் பயணம் செய்வதற்காக அவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இதனை அவர்கள் வருடத்துக்கு ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதுவரை புத்தக வடிவிலான பழைய பஸ் பாஸ் பயன்படுத்தப்பட்டு வந்தது. வருகிற ஏப்ரல் 2-ந் தேதி முதல் அவர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவில் பஸ் பாஸ் வழங்கப்பட உள்ளது.
இந்த நிலையில், தங்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ பஸ் பாஸ் வேண்டாம், புத்தக வடிவிலான பழைய பஸ் பாஸ்தான் வழங்க வேண்டும் என பல்வேறு பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பினர் சென்னை பல்லவன் இல்லம் அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகி பிரபு கூறும்போது, “எங்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவில் பஸ் பாஸ் வழங்கினால் கீழே விழுந்தால், அதனை கண்டுபிடிப்பது சிரமம். எனவே எங்களுக்கு புத்தக வடிவிலான பழைய பஸ் பாஸ் தான் வழங்க வேண்டும்” என்றார்.
இது குறித்து பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தாணுலிங்கம், “மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையத்தின் மூலம் உங்கள் கோரிக்கையை கடிதமாக அனுப்பினால், அது குறித்து பரிசீலனை செய்து பின்னர் புத்தக வடிவிலான பஸ் பாஸ் வழங்குகிறோம். அதுவரை இந்த ‘ஸ்மார்ட் கார்டை’ பயன்படுத்துங்கள்” என்று தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் பிரபு, சிங்காரவேலன், மனோகர், பத்மநாபன், சகாதேவன் உள்ளிட்டோர் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அருண் ராயை சந்தித்து இதற்கான மனுவை அளித்தனர். அதற்கு அவர் புத்தக வடிவிலான பாஸ் பாசா? ஸ்மார்ட் கார்டு பாசா? என்பதை முடிவு செய்வதற்காக குறிப்பிட்ட காலம் வரை பழைய பஸ் பாசை அனுமதிக்க கடிதம் கொடுத்து இருப்பதாக பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story