பெண்ணாடம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்


பெண்ணாடம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 29 March 2018 3:45 AM IST (Updated: 29 March 2018 3:24 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணாடம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க கோரி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்ணாடம்,

பெண்ணாடம் அருகே உள்ள சின்னகொசப்பள்ளம், பெரிய கொசப்பள்ளம், கீழ் இருளம்பட்டு, மேல்இருளம்பட்டு, அரியராவி உள்ளிட்ட 5 கிராமங்களும் கொசப்பள்ளம் பஞ்சாயத்தின் கீழ் இயங்கி வருகிறது. இங்கு 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில் பெரியகொசப்பள்ளம், சின்ன கொசப்பள்ளம் ஆகிய 2 கிராமங்களில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.

மக்கள் தொகை அதிகமாக உள்ளதால் இந்த இரு கிராமங்களிலும் பஞ்சாயத்து நிர்வாகத்தின் மூலம் அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க முடியவில்லை. மேலும் இதே பகுதியில் பழுதடைந்தது திறக்கப்படாமல் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சீரமைத்து திறக்க வேண்டும் என்று கோரி திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தனர். இருப்பினும் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் நேற்று பெரியகொசப்பள்ளத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த பெண்ணாடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார், கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) வினுகுட்டன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள், எங்கள் கிராமத்துக்கு கிடைக்க வேண்டிய அரசு சார்ந்த நலத்திட்டங்கள் முழுமையாக கிடைப்பதில்லை. இதனால் பெரியகொசப்பள்ளத்தையும், சின்ன கொசப்பள்ளத்தையும் தனி பஞ்சாயத்தாக பிரிக்க வேண்டும். எங்கள் பகுதியில் உள்ள பழுதடைந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறினர்.

அதற்கு போலீசார், இதுகுறித்து கலெக்டருக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதை ஏற்ற பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story