மாயமான 4 சிறுவர்கள் அரியானாவில் மீட்பு தேர்வுக்கு பயந்து வீட்டை விட்டு ஓடியதாக தகவல்


மாயமான 4 சிறுவர்கள் அரியானாவில் மீட்பு தேர்வுக்கு பயந்து வீட்டை விட்டு ஓடியதாக தகவல்
x
தினத்தந்தி 29 March 2018 3:45 AM IST (Updated: 29 March 2018 3:45 AM IST)
t-max-icont-min-icon

மாயமான 4 சிறுவர்களை போலீசார் அரியானா வில் மீட்டனர். தேர்வுக்கு பயந்து வீட்டை விட்டு சென்றதாக அவர்கள் தெரிவித்தனர்.

மும்பை,

மாயமான 4 சிறுவர்களை போலீசார் அரியானா வில் மீட்டனர். தேர்வுக்கு பயந்து வீட்டை விட்டு சென்றதாக அவர்கள் தெரிவித்தனர்.

4 சிறுவர்கள் மாயம்

மும்பை ஜோகேஸ்வரி மேற்கு ஆதர்ஷ் நகரை சேர்ந்த 14 வயது சிறுவன் கடந்த 24-ந்தேதி வீட்டில் இருந்து செல்போன், சிறிதளவு பணம் போன்றவை எடுத்து கொண்டு வெளியே சென் றான். இதனை கண்ட பெற்றோர் விசாரித்த போது விளையாட செல்வதாக கூறினான். இதன்பின்னர் இரவு அவன் வீடு திரும்பாத தால் பெற்றோர் பல இடங்களில் தேடினர். எங்கும் கிடைக்காததால் சம்பவம் குறித்து ஒஷிவாரா போலீசில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின்படி போலீசார் நடத்திய விசார ணையில், போரிவிலி ரெயில் நிலையத்தில் இருந்து காணாமல் போன சிறுவனு டன் மேலும் 3 சிறுவர்கள் ஜனதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

அரியானாவில் மீட்பு

அந்த சிறுவர்களின் பேற்றோரும் போலீசில் புகார் கொடுத்திருந்தனர். இந்தநிலையில் சிறுவனின் பெற்றோருக்கு செல்போன் அழைப்பு ஒன்று வந்தது. இதில் பேசிய சிறுவன் தாங்கள் சுற்றுலா சென்று இருப்பதாகவும், ஒருவாரம் கழித்து வீட்டிற்கு வருவதாகவும் தெரிவித்தான். இந்த தகவலை பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அழைப்பு வந்த விபரத்தை ஆய்வு செய்ததில் அவர்கள் அரியானா மாநிலம் பரிதாபாத்தில் இருந்து பேசியது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸ் குழுவினர் அங்கு சென்று உள்ளூர் போலீசாரின் உதவியுடன் 4 சிறுவர்களையும் மீட்டு மும்பை அழைத்து வந்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் தேர்வுக்கு பயந்து வீட்டை விட்டு தப்பி சென்றதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சிறுவர்களை எச்சரித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Next Story