காவிரி மேலாண்மை வாரியம் : தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று தொல்.திருமாவளவன் கூறினார்.
சென்னை,
வன்கொடுமை தடுப்பு சட்டத்தை 9-வது அட்டவணையில் சேர்க்க வேண்டும். அந்த சட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். பொருளாளர் முகமது யூசுப், பொதுச்செயலாளர் சிந்தனைசெல்வன், துணை பொதுசெயலாளர்கள் வன்னியரசு, எஸ்.எஸ்.பாலாஜி உள்பட ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
தொல்.திருமாவளவன் பேட்டி
ஆர்ப்பாட்டத்தின்போது தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் யாரையும் உடனடியாக கைது செய்யக் கூடாது. அடிப்படையிலான விசாரணை நடத்தப்பட வேண்டும். முன் அனுமதி பெற வேண்டும் என்றெல்லாம் அந்த சட்டத்தை நீர்த்து போக செய்யும் வகையில் தீர்ப்பு வழங்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்.
நீதிமன்றங்களின் விமர்சனங்களுக்கு உட்படாத வகையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை 9-வது அட்டவணையில் சேர்க்க வேண்டும்.
ஆணவக் கொலையை தடுப்பது தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டு வழங்கி உள்ள தீர்ப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது.
நீதிமன்ற அவமதிப்பு
காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த பா.ஜ.க. தலைவர்கள் கர்நாடக மாநில நலனுக்காக குரல் கொடுக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு எதிராக இருக்கிறார்கள்.
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை நாளைக்குள் (இன்று) அமைக்காவிடில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை எதிர்த்து ஏப்ரல் 1-ந்தேதி எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story