சென்னையில், சைக்கிள் வழித்தடம் அமைக்கும் பணி தீவிரம் அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு கொண்டுவர இலக்கு


சென்னையில், சைக்கிள் வழித்தடம் அமைக்கும் பணி தீவிரம் அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு கொண்டுவர இலக்கு
x
தினத்தந்தி 29 March 2018 4:37 AM IST (Updated: 29 March 2018 4:37 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் சைக்கிள் வழித்தடம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை, 

பெருநகர சென்னை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுத்து, உடலுக்கு ஆரோக்கியம் தரும் சைக்கிள் பகிர்ந்தளித்தல் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக 378 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அங்கு, சைக்கிள் நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்துக்கு, சமீபத்தில் டெண்டர் கோரப்பட்டது. அதில் 2 நிறுவனங்கள் பங்கேற்று, திட்ட பணிகளை மேற்கொள்ள முன்வந்துள்ளன.

அந்த நிறுவனங்கள் சமர்ப்பித்த ஆவணங்களை மதிப்பிடும் பணி நடந்து வருகிறது. அதன் பின்னர் சைக்கிள் பகிர்ந்தளித்தல் திட்டத்துக்கு டெண்டர் இறுதி செய்யப்பட உள்ளது. முதல் கட்டமாக ரூ.36 லட்சம் செலவில் தீவுத்திடல் பகுதியை சுற்றி 4 கி.மீ., வேளச்சேரி சர்தார் பட்டேல் சாலை மற்றும் கிண்டி டி.ஜி.எஸ். தினகரன் சாலையை சுற்றி 13 கி.மீ. என மொத்தம் 17 கி.மீ. தூரத்துக்கு சைக்கிள் செல்ல தனி வழித்தடம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றது.

பயன்பாட்டுக்கு கொண்டுவர...

சாலையின் ஓரத்தில் பச்சை நிற வர்ணம் தீட்டப்பட்டு, அதில் சைக்கிள் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் சைக்கிள் செல்லும் வழித்தடம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் கட்ட பணிகள் நிறைவடைந்து, அடுத்த மாதம் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் சைக்கிள் செல்லும் வழித்தடத்தை பிரபலப்படுத்தவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சைக்கிள் பகிர்ந்தளித்தல் திட்டத்தின்படி, முக்கிய இடங்களில் சைக்கிள் நிறுத்தங்கள் அமைக்கப்படும். ஒருவர் எந்தவொரு நிறுத்தத்தில் இருந்தும் சைக்கிளை எடுத்துச்சென்று, எந்தவொரு நிறுத்தத்திலும் நிறுத்தலாம். சைக்கிள்கள் எங்கு செல்கிறது? என்பதை கண்காணிக்க ஜி.பி.எஸ். கருவியும் பொருத்தப்பட உள்ளது. செல்போன் அப்ளிகேசன் மூலமாக பதிவு செய்து சைக்கிள் எடுத்துச்செல்லலாம். வாடிக்கையாளர்கள் சைக்கிளை பயன்படுத்துவதற்கு ஏற்றாற்போல வாடகையாக கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

ஆயத்த பணிகள்

இதுகுறித்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் சிறப்பு அதிகாரி எல்.நந்தகுமார் கூறியதாவது:-

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், சுவாமி சிவானந்தா சாலை, கொடி மர சாலை, நேப்பியர் பாலம் சாலை மற்றும் அண்ணா சாலையில் சுமார் 4 கி.மீ. தூரத்துக்கு வட்ட வடிவில் சாலையில் சைக்கிள் குறியீடு வரையப்பட்டுள்ளது. இதில் தற்போது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் தங்களுடைய சைக்கிள்களை ஓட்டிச்செல்வதை நாங்கள் கண்கூடாக பார்க்கிறோம்.

சைக்கிள் வழித்தடத்தில் பாதுகாப்பு இருக்கவேண்டும் என்பதற்காக நாங்கள் அந்த தடத்தில், குறியீடு பதாகைகள், பிரதிபலிப்பான்கள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை செய்துவருகிறோம். சைக்கிள் செல்லும் தனி வழிதடத்தை நல்ல முறையில் பொதுமக்கள் பயன்படுத்தவேண்டும் என்பதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story