செங்கோட்டை- புனலூர் இடையே 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ரெயில் சேவை தாம்பரம்- கொல்லம் ரெயில் இயக்கப்படுகிறது


செங்கோட்டை- புனலூர் இடையே 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ரெயில் சேவை தாம்பரம்- கொல்லம் ரெயில் இயக்கப்படுகிறது
x
தினத்தந்தி 30 March 2018 2:15 AM IST (Updated: 29 March 2018 11:57 PM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை- புனலூர் இடையே 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ரெயில் சேவை தொடங்குகிறது. தாம்பரம்- கொல்லம் இடையே முதல் ரெயில் இயக்கப்படுகிறது.

நெல்லை,

செங்கோட்டை- புனலூர் இடையே 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ரெயில் சேவை தொடங்குகிறது. தாம்பரம்- கொல்லம் இடையே முதல் ரெயில் இயக்கப்படுகிறது.

அகல ரெயில் பாதை

தமிழகத்தையும் கேரளாவையும் இணைக்கும் செங்கோட்டை -புனலூர் மீட்டர் கேஜ் ரெயில் பாதை அகற்றப்பட்டு தற்போது புதிதாக அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ரெயில் பாதையில் அதிவேக ரெயில் இயக்கி சோதனை நடத்திய பிறகு, ரெயில்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டது.

இந்த பாதையில் ஏற்கனவே செங்கோட்டையில் இருந்து பகவதிபுரம் வரையிலும், மறுமார்க்கத்தில் புனலூரில் இருந்து எடமண் வரையிலும் பாசஞ்சர் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் முழுமையாக ரெயில் இயக்கப்படவில்லை. இந்த பாதையில் நெல்லையில் இருந்து தென்காசி, செங்கோட்டை, புனலூர் வழியாக கொல்லத்துக்கும், மதுரையில் இருந்து கொல்லத்துக்கும் பாசஞ்சர் ரெயில்கள் இயக்கப்படும் என்று இரு மாநில பயணிகளும் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

சிறப்பு ரெயில் இயக்கம்

இந்த நிலையில் தென்னக ரெயில்வே சார்பில் சென்னை தாம்பரத்தில் இருந்து கொல்லத்துக்கு சிறப்பு கட்டண ரெயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் செங்கோட்டை- புனலூர் இடையே 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ரெயில் சேவை தொடங்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து இந்த ரெயில் (வண்டி எண் 06027) புறப்படுகிறது. இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம் ஆகிய ஊர்களை கடந்து, மறுநாள் அதிகாலை 4.28 மணிக்கு சங்கரன்கோவில் ரெயில் நிலையத்துக்கு வருகிறது. தொடர்ந்து 4.55 மணிக்கு கடையநல்லூர், 5.13 மணிக்கு தென்காசி, 5.50 மணிக்கு செங்கோட்டை, 6.13 மணிக்கு பகவதிபுரம், 7.13 மணிக்கு தென்மலை, 7.48 மணிக்கு எடமண், 8.30 மணிக்கு புனலூர், 8.48 மணிக்கு அவனீசுவரம், 9.15 மணிக்கு கொட்டாரக்கரை ஆகிய ரெயில் நிலையங்களுக்கு வருகிறது. இறுதியாக காலை 10.30 மணிக்கு கொல்லம் ரெயில் நிலையத்தை சென்றடைகிறது.

கூட்ட நெரிசலை சமாளிக்க...

மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வண்டி எண் 06028) நாளை 31-ந் தேதி (சனிக்கிழமை) மதியம் 1 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரெயில் 1.43 மணிக்கு கொட்டாரக்கரை, 1.58 மணிக்கு அவனீசுவரம், 2.10 மணிக்கு புனலூர், 2.43 மணிக்கு எடமண், 3.23 மணிக்கு தென்மலை, மாலை 4.30 மணிக்கு பகவதிபுரம், 4.55 மணிக்கு செங்கோட்டை, 5.13 மணிக்கு தென்காசி, 5.33 மணிக்கு கடையநல்லூர், 6 மணிக்கு சங்கரன்கோவில் ரெயில் நிலையங்களுக்கு வந்து செல்கிறது. அடுத்த நாள் காலை 5.05 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையத்தை சென்றடைகிறது. இந்த ரெயிலில் ஒரு ஏ.சி. 3 அடுக்கு பெட்டி, 6 தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளும், 2 இரண்டாம் வகுப்பு சேர்கார் பெட்டிகளும், 3 பொது பெட்டிகளும், 2 சரக்கு பெட்டியுடன் இணைந்த பெட்டிகளும் இணைக்கப்பட்டு இருக்கும். விடுமுறை காலத்தில் கூட்ட நெரிசலை சமாளிக்க இந்த ரெயில் இயக்கப்படுவதாக ரெயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை மதுரை ரெயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டு உள்ளது.

Next Story