சிவகிரி- நாங்குநேரி கோவில்களில் பங்குனி திருவிழா தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு


சிவகிரி- நாங்குநேரி கோவில்களில் பங்குனி திருவிழா தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 30 March 2018 2:30 AM IST (Updated: 30 March 2018 12:13 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி, நாங்குநேரி கோவில்களில் பங்குனி திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

சிவகிரி,

சிவகிரி, நாங்குநேரி கோவில்களில் பங்குனி திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பாலசுப்பிரமணிய சுவாமி


நெல்லை மாவட்டம் சிவகிரி ஜமீனுக்கு பாத்தியப்பட்ட கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் மற்றும் தெப்ப திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயத்தினரால் விழா நடத்தப்பட்டது. விழா நாட்களில் தினமும் இரவில் பாலசுப்பிரமணிய சுவாமி அலங்கரிக்கப்பட்டு பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா புறப்பாடு நடந்தது.

தேரோட்டம்

9-ந் திருநாளான நேற்று தேரோட்டம் நடந்தது. இதனை முன்னிட்டு காலை 6 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் மூலவருக்கும் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. அதை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி குமாரபுரம், காந்தி ரோடு, கீழ ரதவீதி வழியாக தேர் நிலையம் வந்து தேரில் எழுந்தருளினார்.

காலை 11.30 மணியளவில் சிவகிரி ஜமீன்தார் ராஜா சேவுகப்பாண்டியன் என்ற விக்னேசுவர சின்னத்தம்பியார் தேர் வடம் தொட்டு கொடுத்ததும், பக்தர்கள் அரோகரா அரோகரா என்ற பக்தி கோஷத்துடன் தேரை இழுத்துச் சென்றனர்.

சிறப்பு பூஜைகள்


கீரைக்கடை சந்திப்பு, சேனை தலைவர் திருமண மண்டபம் அருகே கருப்பசாமி கோவில் சந்திப்பு, அல்லா கோவில் சந்திப்பு, 7-ம் திருநாள் மண்டகப்படி சந்திப்பு ஆகிய இடங்களில் தேர் நின்று சென்று, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மதியம் 1.15 மணி அளவில் தேர் நிலையத்தை வந்தடைந்தது.

தேரோட்டத்தை முன்னிட்டு சிவகிரி நகரப்பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி கண்மணி தலைமையில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் சிவகிரி இன்ஸ்பெக்டர் மாரீசுவரி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேரோட்டத்தில் சிவகிரி, வாசுதேவநல்லூர், ராயகிரி, புளியங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு மேல் தெப்ப திருவிழா நடக்கிறது.

நாங்குநேரி

நெல்லை மாவட்டம் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் தினமும் பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது.

விழாவையொட்டி அலங்கரிக்கப்பட்ட கருட வாகனம், அன்ன வாகனம், கிளி வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி வீதிஉலா புறப்பாடு நடந்தது. 7-ம் திருநாளில் தங்க சப்பரம் வீதிஉலா நடந்தது.

தங்க தேரோட்டம்


10-ந் திருநாளான நேற்று தேரோட்டம் நடந்தது. முன்னதாக பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பின்னர் தங்க முலாம் பூசப்பட்ட தேரில் பெருமாள் எழுந்தருளினார். 8.30 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது.

நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர். நான்கு ரதவீதிகளிலும் தேர் சுற்றி வந்து, 10 மணி அளவில் நிலையத்தை வந்தடைந்தது. தேரோட்டத்தில் நாங்குநேரி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Next Story