தூக்க மாத்திரைகளை தின்று பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு


தூக்க மாத்திரைகளை தின்று பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 30 March 2018 4:30 AM IST (Updated: 30 March 2018 12:17 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் தூக்க மாத்திரைகளை தின்று பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பணிச்சுமை காரணமாக இந்த முடிவுக்கு அவர் வந்தாரா? என போலீஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் உள்ள துறையூர் ரோடு கல்யாண்நகரை சேர்ந்தவர் சாமிநாதன். ஓய்வுபெற்ற வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரி. இவருடைய மனைவி ரெங்கநாயகி (வயது 48) பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் போலீசாக உள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். பெரம்பலூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் ரெங்கநாயகி சமீபத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில் பிளஸ்-2, பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொது தேர்வு நடந்து வருவதால் கடந்த சில வாரமாக பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள மாற்றப்பட்டு அங்கு ரெங்கநாயகி பணியாற்றினார். அதன்படி நேற்று முன்தினம் இரவு அங்கு பணிக்கு சென்று விட்டு நேற்று அதிகாலை 5.30 மணியளவில் வீட்டிற்கு வந்தார். பின்னர் கட்டிலில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். காலையில் வீட்டிலுள்ளவர்கள் அவரிடம் பேசிய போது சோர்வாக உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் பெண் போலீஸ் ரெங்கநாயகி தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயற்சித்தது தெரியவந்தது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஞானசிவக்குமார் உள்பட போலீசார் அவரது வீட்டிற்கு சென்று விசாரித்தனர். பின்னர் மயங்கிய நிலையிலிருந்த ரெங்கநாயகியை பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்த போது, மன உளைச்சல் அதிகமாகி விட்டதால் 10 தூக்க மாத்திரைகளை தின்று விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் ரெங்கநாயகிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ரெங்கநாயகியின் தற்கொலை முயற்சிக்கு காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் விசாரித்தனர். பணிச்சுமை கொடுத்து உயரதிகாரிகள் டார்ச்சர் செய்ததன் காரணமாக ரெங்கநாயகி தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது குடும்ப பிரச்சினையால் மனமுடைந்து சாவதே மேல் என முடிவு எடுத்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே போலீஸ் பணியில் ரெங்கநாயகி சேர்ந்திருந்தாலும், இடைப்பட்ட சில ஆண்டுகள் பணியாற்றாமல் இருந்தார். அதன் பின்னர் சமீபத்தில் தான் மீண்டும் அவர் பணிக்கு வந்தார். இதனால் தான் அவர் பதவி உயர்வு பெறமுடியாமல் போலீசாகவே இருந்தார். மேலும் அவரது இளைய மகள் திருமணமாகி வெளியூரில் கணவருடன் வசிக்கிறார். அவர் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்த ரெங்கநாயகி தற்போது அதில் விரிசல் விழுந்ததாக சக போலீசாரிடம் கூறி அவ்வப்போது வருத்தப்பட்டிருக்கிறார். தற்கொலை முயற்சிக்கான காரணம் என்ன? என்பது பற்றி துறை ரீதியாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

Next Story