கயத்தாறு அருகே காற்றாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு; லாரிகள் சிறைபிடிப்பு


கயத்தாறு அருகே காற்றாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு; லாரிகள் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 30 March 2018 2:30 AM IST (Updated: 30 March 2018 12:43 AM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே காற்றாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, லாரிகளை சிறைபிடித்தனர்.

கயத்தாறு,

கயத்தாறு அருகே காற்றாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, லாரிகளை சிறைபிடித்தனர்.

காற்றாலைகள் அமைக்க எதிர்ப்பு

கயத்தாறு சுற்றுவட்டார பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான காற்றாலை பண்ணைகளில் 1,300-க்கு மேற்பட்ட காற்றாலைகள் உள்ளன. இங்கு கூடுதலாக காற்றாலைகள் அமைக்கும் பணியில் தனியார் நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. இதற்கிடையே விவசாய நிலங்களில் காற்றாலைகள் அமைப்பதால், பயிர்களில் ஈரப்பதம் குறைந்து விளைச்சல் குறைவதாகவும், காற்றாலையின் இறக்கைகள் மோதி பறவைகள் இறப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் காற்றாலைகள் அமைப்பதற்காக குடியிருப்புகளின் அருகில் வெடி வைத்து, ஆழமாக பள்ளம் தோண்டுவதால் வீடுகளில் விரிசல்கள் ஏற்படுகின்றன. மேலும் கட்டுமான பணிக்காக நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் கிராமப்புற சாலைகளின் வழியாக இரவும் பகலுமாக செல்வதால், விபத்துகள் ஏற்படுவதோடு, சாலைகளும் பழுதடைகின்றன. எனவே கயத்தாறு சுற்றுவட்டார பகுதிகளில் கூடுதலாக காற்றாலைகள் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

லாரிகள் சிறைபிடிப்பு


கயத்தாறு அருகே உசிலங்குளத்தில் குடியிருப்புகளின் அருகில் காற்றாலை அமைக்கும் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் அங்கு வெடி வைத்து ஆழமாக பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் அங்கு அடித்தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக நேற்று காலையில் காங்கிரீட் கலவை ஏற்றி வந்த லாரிகளை உசிலங்குளத்தில் பொதுமக்கள் சிறைபிடித்தனர். மேலும் லாரிகள் செல்லாத வகையில் சீமைக்கருவேல மரங்களை வெட்டி சாலையில் போட்டனர். இதனால் காற்றாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கயத்தாறில் இருந்து உசிலங்குளத்துக்கு பஸ் வசதி கிடையாது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சைக்கிளில் கயத்தாறுக்கு சென்று வருகின்றனர். இங்கு 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் புதிதாக சாலை அமைக் கப்பட்டு உளளது. காற்றாலை அமைப்பதற்காக கனரக வாகனங்கள் இரவும் பகலும் செல்வதால், விரைவில் சாலை குண்டும்-குழியுமாக மாறி விடும். பெரும்பாலான காற்றாலை பண்ணைகள் தங்களது காற்றாலைகளுக்கு செல்வதற்கு தனியாக சாலை அமைத்துள்ளனர். அதேபோன்று சாலை அமைத்து தனியார் காற்றாலைக்கு வாகனங்கள் செல்ல வேண்டும் என்று தெரிவித்தனர்.

Next Story