போலீசாருடன் நண்பர்கள் குழு இணைந்து செயல்பட வேண்டும்


போலீசாருடன் நண்பர்கள் குழு இணைந்து செயல்பட வேண்டும்
x
தினத்தந்தி 30 March 2018 4:00 AM IST (Updated: 30 March 2018 1:01 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களை காக்கும் பணியில் போலீசாருடன் இணைந்து நண்பர்கள் குழு செயல்பட வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா கூறினார்.

கூடலூர்,

கூடலூர், பந்தலூர் தாலுகா அளவிலான போலீஸ் நண்பர்கள் குழுவுக்கான கருத்தரங்கு மற்றும் பயிற்சி முகாம் கூடலூர் ஜானகியம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் அனைவரையும் வரவேற்றார். இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா பேசியதாவது.

தமிழகத்தில் 8 கோடி மக்கள் வாழ்கின்றனர். கொலை, கொள்ளை என நடைபெறும் குற்றங்களை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், பொதுமக்களை காக்கும் பணியில் போலீசாருடன் நண்பர்கள் குழுவும் இணைந்து செயல்பட வேண்டும். போலீசாரை நண்பர்கள் குழுவினர் அடிக்கடி தொடர்பு கொள்ள வேண்டும்.

சமுதாயத்தில் நடக்கும் விஷயங்கள் நண்பர்கள் குழுவினருக்கு தான் முதலில் தெரிய வரும். இதன் மூலம் போலீசாரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் போது குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும். நண்பர்கள் குழுவினர் தாங்கள் வசிக்கும் பகுதியை கண்காணிக்க வேண்டும். சந்தேக நபர்கள் நடமாட்டம் இருந்தால் போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் போலீஸ் நண்பர்கள் குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. சென்னையை சேர்ந்த பயிற்சியாளர்கள் சினேகா, செபாஸ்டியன் ஆகியோர் கலந்து கொண்டு நண்பர்கள் குழுவினர் போலீசாருடன் பணியாற்றும் முறை, குற்றங்களை தடுக்க நண்பர்கள் குழுவினர் உதவும் வழிகள், காவல் துறையினர் நண்பர்கள் குழுவினரை பயன்படுத்தி பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பது பற்றி விளக்கினர். இந்த முகாமில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் ரவிக்குமார், சிவக்குமார், இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் உள்பட போலீசார், நண்பர்கள் குழுவினர் கலந்து கொண்டனர்.

Next Story