பெரிய வியாழனையொட்டி தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி திருப்பலியும் நடைபெற்றது


பெரிய வியாழனையொட்டி தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி திருப்பலியும் நடைபெற்றது
x
தினத்தந்தி 30 March 2018 4:15 AM IST (Updated: 30 March 2018 1:22 AM IST)
t-max-icont-min-icon

பெரிய வியாழனையொட்டி, குமரி மாவட்ட தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சியும், திருப்பலியும் நடைபெற்றது.

நாகர்கோவில்,

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பெருவிழா வருகிற 1-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைப்பட்டு இறப்பதற்கு முந்தைய தினம் தன்னுடைய 12 சீடர்களுடன் பாஸ்கா விருந்து (கடைசி இரவு உணவு) உண்டார். அப்போது, அவர் 12 சீடர்களின் பாதங்களை கழுவினார். “நான் செய்தது போல் நீங்களும் செய்யுமாறு உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்‘ என்று தனது சீடர்களிடம் அவர் கூறினார்.

அதை நினைவுகூரும் வகையில் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் பெரிய வியாழன் அன்று பாதம் கழுவும் நிகழ்ச்சி மற்றும் திருப்பலியும் நடைபெறுவது வழக்கம். நேற்று பெரிய வியாழனையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களிலும் பாதம் கழுவும் நிகழ்ச்சி மற்றும் திருப்பலி நடைபெற்றது.

ஆயர் நசரேன் சூசை

கோட்டார் மறைமாவட்டத்தின் தலைமை பேராலயமாக விளங்கும் புனித சவேரியார் பேராலயத்தில் நேற்று மாலை இந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயர் நசரேன் சூசை தலைமையில் ஆயரின் செயலாளர் திவ்யன், கோட்டார் மறைமாவட்ட முதன்மை பணியாளர் மைக்கிள் ஆஞ்சலுஸ், பங்குத்தந்தை குணபால் ஆராச்சி, இணை பங்குத்தந்தை சகாய ஆனந்த், மறைமாவட்ட செயலாளர் இம்மானுவேல், பொருளாளர் அலோசியஸ் பென்சிகர், அருட்சகோதரர் சுனில் ஆகியோர் கலந்துகொண்டு கூட்டுத்திருப்பலி நிறைவேற்றினர். திருப்பலியின்போது, ஆயர் நசரேன் சூசை முதியவர்கள், சிறுவர்-சிறுமிகள் என 12 பேரின் பாதங்களை கழுவினார்.

திருப்பலி நிறைவடைந்ததும் நள்ளிரவு வரை நற்கருணை ஆராதனை நடைபெற்றது. கோட்டார் சவேரியார் பேராலயத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை நற்கருணை ஆராதனை தொடர்ந்து நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை (சனிக்கிழமை) நள்ளிரவு 11 மணிக்கு பாஸ்கா திருவிழிப்பு சடங்கு மற்றும் உயிர்ப்பு திருப்பலி நடைபெறுகிறது.

ஆயர் வின்சென்ட் மார்பவுலோஸ்

மரியாகிரி புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார்பவுலோஸ் தலைமையில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ், இறைமக்கள் 12 பேரின் பாதங்களை தண்ணீரால் கழுவி, துணியால் துடைத்தார்.

இன்று கொல்லங்கோடு அருகே பாலவிளை புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெறும் புனித வெள்ளி திருச்சடங்கினையும், நாளை நள்ளிரவு ஈஸ்டர் திருசடங்குகளையும் ஆயர் வின்சென்ட் மார்பவுலோஸ் நடத்தி வைக்கிறார்.

சி.எஸ்.ஐ. ஆலயங்கள்

குமரி மாவட்டத்தில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயங்களிலும் நேற்று சிறப்பு பிராத்தனை நடைபெற்றது. இதில் திரளான சபைமக்கள் கலந்துகொண்டனர்.


Next Story