நாமக்கல்லில் விவசாயிகளுக்கு ரூ.10 லட்சத்தில் வேளாண் உபகரணங்கள் கலெக்டர் வழங்கினார்


நாமக்கல்லில் விவசாயிகளுக்கு ரூ.10 லட்சத்தில் வேளாண் உபகரணங்கள் கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 30 March 2018 4:00 AM IST (Updated: 30 March 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் விவசாயிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான வேளாண் உபகரணங்களை கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வேளாண்மைத் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி, ரூ.10 லட்சத்து 13 ஆயிரத்து 500 மதிப்பிலான வேளாண் உபகரணங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சிறு மற்றும் குறு விவசாயிகளை கண்டறிந்து, விவசாயத்தில் தனிநபர் பண்ணை முறைக்கு பதிலாக கூட்டு பண்ணைய முறையை கடைபிடிப்பதின் மூலம் வருமானம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட கூட்டுப்பண்ணையம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி சிறு மற்றும் குறு விவசாயிகளை உழவர் ஆர்வலர் குழுக்களாக அமைத்து, அதனை தொடர்ந்து உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்களாக இணைக்கப்பட்டு பின்னர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனமாக நிறுவிட தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

280 உழவர் ஆர்வலர் குழுக்கள்

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 280 உழவர் ஆர்வலர் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கும் நிதி மூலதனமாக ரூ.5 லட்சம் விடுவித்திடவும், அந்த நிதியினை கொண்டு பொதுவான கட்டமைப்பு ஏற்படுத்திடவும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த திட்டத்திற்காக நாமக்கல் மாவட்டத்திற்கு அரசு வழங்கிய தொகுப்பு நிதி ரூ.2 கோடியே 80 லட்சம் சம்பந்தப்பட்ட உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வங்கி பரிமாற்றம் மூலம் நேர் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர் கந்தசாமி, வேளாண்மை துணை இயக்குனர் அசோகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story