மாலூர் டவுனில் எண்ணெய் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து 5½ மணி நேரம் போராடி தீயணைப்பு


மாலூர் டவுனில் எண்ணெய் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து 5½ மணி நேரம் போராடி தீயணைப்பு
x
தினத்தந்தி 30 March 2018 2:30 AM IST (Updated: 30 March 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

மாலூர் டவுனில் எண்ணெய் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயை 9 வாகனங்களில் வந்த தீயணைப்பு படையினர் 5½ மணி நேரம் போராடி அணைத்தனர்.

கோலார் தங்கவயல்,

மாலூர் டவுனில் எண்ணெய் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயை 9 வாகனங்களில் வந்த தீயணைப்பு படையினர் 5½ மணி நேரம் போராடி அணைத்தனர்.

பயங்கர தீ விபத்து

கோலார் மாவட்டம் மாலூர் டவுனில் தனியார் எண்ணெய் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்றும் வழக்கம்போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில் காலை 10 மணி அளவில், எண்ணெய் தொழிற்சாலையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் அனைவரும் உடனடியாக அங்கிருந்து வெளியே ஓடிவிட்டனர். சிறிது நேரத்தில் அந்த தீ, மளமளவென தொழிற்சாலை முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதன்காரணமாக அந்தப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து மாலூர் போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

5½ மணி நேரம் போராடி அணைத்தனர்


அதன்பேரில், 3 வாகனங்களில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தொழிற்சாலையில் இருந்த எண்ணெய் பேரல்களில் தீப்பிடித்து எரிந்ததால், அவர்களால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் தீயணைப்பு படையினர் பக்கத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தீ பரவாமல் இருக்க நடவடிக்கை எடுத்தனர். மேலும் அருகில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்த தொழிலாளர்களும் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.

இதையடுத்து கோலார், பங்காருபேட்டை, கோலார் தங்கவயல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மேலும் 6 வாகனங்களில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். காலை 10 மணிக்கு பிடித்து எரிந்த தீ, 5½ மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு மதியம் 3.30 மணி அளவில் முழுவதுமாக அணைக்கப்பட்டது.

போலீஸ் விசாரணை

தொழிற்சாலையில் பிடித்து எரிந்த தீயை, 6 கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்தும் பார்க்க முடிந்ததாக அந்தப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த தீ விபத்தால், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இதுதொடர்பாக மாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் தீப்பிடித்ததா? என்பது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதுதொடர்பாக மாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து, கோலார் மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி ராகவேந்திரா கூறுகையில், தீ விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையில் இருந்து தொழிலாளர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறியதால், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணைக்கு பின்னரே தீ விபத்துக்கான காரணம் தெரியவரும் என்றார்.

Next Story