சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த வங்கி கொள்ளையில் முக்கிய குற்றவாளி நேபாளத்தில் கைது


சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த வங்கி கொள்ளையில் முக்கிய குற்றவாளி நேபாளத்தில் கைது
x
தினத்தந்தி 30 March 2018 4:45 AM IST (Updated: 30 March 2018 2:52 AM IST)
t-max-icont-min-icon

விருகம்பாக்கத்தில் நடந்த வங்கி கொள்ளையில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி நேபாளத்தில் கைது செய்யப்பட்டார்.

பூந்தமல்லி, 

சென்னை விருகம்பாக்கம், ஆற்காடு சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடந்த 26-ந் தேதி லாக்கர்களை உடைத்து பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் வங்கி செயல்பட்டு வந்த கட்டிடத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்த நேபாளத்தை சேர்ந்த சபின்லால்சந்த் தனது மகன் திலுவுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து 5 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை பிடிக்கும் பணியில் கே.கே.நகர் போலீசார் ஈடுபட்டு வந்தனர். வங்கியில் உள்ள 259, 654 ஆகிய 2 லாக்கர்கள் மட்டுமே உடைக்கப்பட்டுள்ளதாக வங்கி நிர்வாகம் மற்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4-க்கும் மேற்பட்டவர்கள்

கியாஸ் சிலிண்டர் மற்றும் வெல்டிங் கருவி மூலம் லாக்கர்கள் உடைக்கப்பட்டு கொள்ளை நடந்ததால் கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்த 3பேரிடம் விசாரித்து வந்தனர். தற்போது கொள்ளையர்களுக்கு உதவியதாக அவரது நண்பர்கள் கார் டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

காவலாளி சபின்லால்சந்த், அவரது மகன் திலு ஆகியோருடன் சேர்ந்து 4-க்கும் மேற்பட்டோர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. சபின்லால்சந்த் செல்போனுக்கு கொள்ளை சம்பவம் நடப்பதற்கு முன்பும், அதன் பிறகும் யாரெல்லாம் தொடர்புகொண்டு பேசி உள்ளனர் என்பது குறித்து விசாரித்தபோது, நேபாளத்தை சேர்ந்த ஹீராராம், ஹரிபகதூர் ஆகியோர் தொடர்பில் இருந்தது தெரிந்தது. கொள்ளை சம்பவத்துக்கு பிறகு அவர்கள் பேசுவதை நிறுத்தி உள்ளனர்.

நண்பர்களிடம் விசாரணை

இதனால் போலீசாருக்கு அவர்கள் மீதும் சந்தேகம் எழுந்தது. அவர்கள் ராமாபுரம், அண்ணாநகரில் காவலாளிகளாக வேலை செய்துள்ளனர். அவர்களும் நேபாளத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற அடிப்படையில் 2 பேரையும் பெங்களூருவில் போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் பதிவான கைரேகைகள் அவர்களுடன் ஒத்துப்போகிறதா? என்றும் ஆய்வு செய்து வருகின்றனர்.

கொல்கத்தா சென்ற ஒரு தனிப்படையினர் நேற்றுமுன்தினம் இரவு சென்னை திரும்பினர். கியாஸ் சப்ளை செய்ததாக ரமேஷ் என்பவரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர். வங்கியில் உள்ள ஊழியர்கள் மற்றும் இதற்கு முன்பு இந்த வங்கி கிளையில் வேலை செய்துவிட்டு இடம் மாறுதலானவர்கள், வேலையைவிட்டு நின்றவர்கள் என ஒரு பட்டியலை தயாரித்து சுமார் 15-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடக்கிறது.

குற்றவாளி சிக்கினான்

நேபாளம் சென்ற தனிப்படையினர் சபின்லால்சந்த் பற்றி அங்குள்ள போலீசாருக்கும் தகவல் தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில் நேற்று நேபாள போலீசார் பழைய குற்றவாளிகள் 15 பேரை கைது செய்து அவர்களிடம் தனித்தனியே விசாரித்தனர். அப்போது அதில் வங்கி கொள்ளையில் தொடர்புடைய சபின்லால்சந்த் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவர்கள் அங்குள்ள சென்னை போலீசாருக்கு தெரிவித்தனர். இதையடுத்து சபின்லால்சந்த்தை சட்டப்படி சென்னை அழைத்து வருவதற்கான பணியில் சென்னை போலீசார் ஈடுபட்டு இருப்பதாகவும், இன்றோ அல்லது நாளையோ விமானம் அல்லது ரெயில் மூலம் சபின்லால்சந்த்தை போலீசார் சென்னை அழைத்து வருவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மகனை பிடிக்க முயற்சி

சென்னை அழைத்து வந்து விசாரித்த பின்னரே கொள்ளை சம்பவம் எப்படி நடந்தது? இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்ற முழுவிவரம் தெரியவரும். சபின்லால்சந்த் பிடிபட்டது குறித்து சென்னை போலீஸ் உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் அதனை உறுதிப்படுத்தவில்லை.

மேலும் தலைமறைவாக உள்ள அவரது மகனை பிடிக்கும் பணியிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story