மணலி விரைவு சாலையில் 10-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் வியாபாரிகள் சாலை மறியல்


மணலி விரைவு சாலையில் 10-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் வியாபாரிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 30 March 2018 5:15 AM IST (Updated: 30 March 2018 3:06 AM IST)
t-max-icont-min-icon

மணலி விரைவு சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 10-க்கும் மேற்பட்ட கடைகள் அதிரடியாக அகற்றப்பட்டன.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் சத்திய மூர்த்தி நகர் பகுதியில் மணலி விரைவு சாலையை ஓட்டி ஏராளமான கடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தன. அப்பகுதியை சேர்ந்த ஒருவர் மணலி விரைவு சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு மணலி விரைவு சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனையடுத்து நேற்று சத்தியமூர்த்தி சுப்பிரமணியநகர் பகுதிக்கு நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் மதியழகன், திருவொற்றியூர் தாசில்தார் ராஜ்குமார், மாதவரம் போலீஸ் உதவி கமிஷனர் கலைச்செல்வன் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து சென்றனர்.

சாலை மறியல்

பின்பு பொக்லைன் எந்திரம் மூலம் அந்த பகுதியில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கடைகளை அகற்ற தொடங்கினார்கள். இதனால் திருவொற்றியூர் பொது வர்த்தகர் சங்கத்தை சேர்ந்த வியாபாரிகள் சங்க தலைவர் ராமசாமி தலைமையில் ஏராளமான வியாபாரிகள் அங்கு திரண்டனர்.

திடீரென அதிகாரிகளை சூழ்ந்து கொண்ட அவர்கள் கடைகளை காலிசெய்ய கால அவகாசம் தரும்படி கேட்டனர். ஆனால் ஐகோர்ட்டு உத்தரவு கால அவகாசம் தரமுடியாது என அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

இதனை தொடர்ந்து அங்கு கடை வைத்திருக்கும் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் வேலாயுதம் மற்றும் பெண்கள் உள்பட ஏராளமான வியாபாரிகள் மணலி விரைவு சாலையில் அமர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இடித்து அகற்றம்

அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் வலியுறுத்தினார்கள். ஆனாலும் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் போலீசார் அவர்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினார்கள்.

இதனையடுத்து அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த டாஸ்மாக் கடை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கடைகளை அதிகாரிகள் அதிரடியாக இடித்து அகற்றினார்கள்.

மணலி விரைவு சாலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகள் தொடர்ந்து அகற்றப்படும் எனவும் அதிகாரிகள் கூறினார்கள். 

Next Story