செங்குன்றம் அருகே லாரி மோதியதால் டிரான்ஸ்பார்மர்கள் தீப்பிடித்து எரிந்தன
செங்குன்றம் அருகே மின்கம்பம் மீது லாரி மோதியதால் 2 டிரான்ஸ்பார்மர்கள் தீப்பிடித்து எரிந்தன.
செங்குன்றம்,
செங்குன்றத்தை அடுத்த சாமியார்மடத்தில் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனத்திற்கு மின்சப்ளை கொடுப்பதற்காக அதன் அருகில் ஒரு டிரான்ஸ்பார்மர் உள்ளது.
இதேபோல் சென்னையில் இருந்து செங்குன்றத்திற்கு வரும் வழியில் மற்றொரு டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த 2 டிரான்ஸ்பார்மர்களுக்காக சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையோரமாக மின்கம்பங்கள் உள்ளன. நேற்று நள்ளிரவு ஆந்திராவில் இருந்து சென்னைக்கு நெல் ஏற்றி வந்த லாரி ஒன்று சாலையோரமாக இருந்த மின்கம்பத்தின் மீது மோதியது. இதில் அந்த மின்கம்பம் சாய்ந்து விழுந்தது.
டிரான்ஸ்பார்மர்களில் தீ
இதில் மின்கம்பிகள் அறுந்து கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் விழுந்தன. அப்போது, 2 டிரான்ஸ்பார்மர்களிலும் தீப்பிடித்து எரிந்தது. உடனே தீ அணைந்து விட்டது. அப்போது அந்த வழியாக செங்குன்றம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மனோவாசெபாஸ்டின், பலராமன் ஆகியோர் மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அறுந்துவிழுந்த மின்கம்பி இவர்கள் வந்த மோட்டார்சைக்கிள் மீது விழுந்தது.
உடனே இருவரும் மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு அலறியடித்துக்கொண்டு ஓடினர். இதனால் இருவரும் உயிர்தப்பினர். இதுகுறித்து புழல் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். உடனே புழல் மின்வாரிய உதவி பொறியாளர் கணேசன் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து மின்கம்பிகளை அகற்றினர்.
போக்குவரத்து பாதிப்பு
அதுவரை சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருபுறங்களிலும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. மின்கம்பிகளை அகற்றிய பிறகு, வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. இதனால் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடனடியாக கீழே விழுந்த மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பத்தை அமைத்து மின் இணைப்பு கொடுத்தனர். இதனால் அப்பகுதியில் 4 மணிநேரம் மின்சாரம் தடைபட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.
Related Tags :
Next Story