பெண்ணின் கோரிக்கையை ஏற்று குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தந்தையின் பெயரை நீக்க முடியாது


பெண்ணின் கோரிக்கையை ஏற்று குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தந்தையின் பெயரை நீக்க முடியாது
x
தினத்தந்தி 30 March 2018 3:45 AM IST (Updated: 30 March 2018 3:34 AM IST)
t-max-icont-min-icon

திருமணம் ஆகாத பெண் என்று கூறுபவரின் கோரிக்கையை ஏற்று குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தந்தையின் பெயரை நீக்க முடியாது என்று ஐகோர்ட்டில் மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

மும்பை,

திருமணம் ஆகாத பெண் என்று கூறுபவரின் கோரிக்கையை ஏற்று குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தந்தையின் பெயரை நீக்க முடியாது என்று ஐகோர்ட்டில் மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

ஐகோர்ட்டில் மனு

பால்கர் மாவட்டம் நாலச்சோப்ராைவ சேர்ந்த 31 வயது பெண் ஒருவர் மும்பை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் திருமணம் ஆகாத பெண். 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சோதனை குழாய் முறையில் மும்பையில் குழந்தையை பெற்றுக் கொண்டேன். ஆனால் எனது குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தந்தையின் பெயர் சேர்க்கப்பட்டு உள்ளது. தந்தையின் பெயரை நீக்கி விடுமாறு மும்பை மாநகராட்சியிடம் கோரிக்கை வைத்தேன். ஆனால் அவர்கள் மறுத்து விட்டார்கள். எனவே தந்தையின் பெயரை நீக்க மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

உத்தரவு

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.எஸ்.ஓகா, சக்லா சம்பந்தப்பட்ட பெண்ணின் மனு மீது பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு மும்பை மாநகராட்சிக்கு கடந்த 14-ந் தேதி உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் வழக்கு விசாரணை மீண்டும் ஐகோர்ட்டில் வந்தது. அப்போது மும்பை மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் கூறியிருப் பதாவது:-

நீக்க முடியாது

குழந்தையை பெற்றெடுத்த பெண் ஆஸ்பத்திரி விண்ணப்ப படிவத்தில் கணவரின் பெயரை குறிப்பிட்டு உள்ளார். அதன் அடிப்படையில் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தந்தையின் பெயர் சேர்க்கப்பட்டு உள்ளது. அது தவறாக சேர்க்கப்பட்டு இருந்தால், அதை சம்பந்தப்பட்ட அதிகாரி திருத்தம் செய்யலாம். ஆனால் சம்பந்தப்பட்ட பெண்ணே தனது திருமண நிலவரத்தை தெரிவித்து இருக்கும் நிலையில், அவரது குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தந்தையின் பெயரை நீக்கும் அதிகாரம் மாநகராட்சிக்கு இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story