தலைவாசல் அருகே வடசென்னிமலை பாலசுப்பிரமணியசாமி கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம்
தலைவாசல் அருகே உள்ள வடசென்னிமலை பாலசுப்பிரமணியசாமி கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
தலைவாசல்,
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வடசென்னிமலை பாலசுப்பிரமணியசாமி கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா ஆண்டு தோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.
மேலும் மூலவருக்கு பால், பன்னீர், தேன் ஆகியவற்றை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த உற்சவத்தில் பங்கேற்ற பக்தர்கள் சாமிக்கு மலர் தூவி வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை காட்டுக்கோட்டை கட்டளைதாரர்கள் செய்திருந்தனர்.
தேரோட்டம்
நேற்று சாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை மற்றும் சாமி கிரிவலம் வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழா நாளான இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் பால் அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து ராஜ அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. மாலை 4.45 மணிக்கு மேல் பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெறுகிறது.
தேரோட்டத்தை கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் கே.காமராஜ், எம்.எல்.ஏ.க்கள் மருதமுத்து, சின்னதம்பி, மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வரதராஜன் மற்றும் மாவட்ட வன அலுவலர்கள், தொழில் அதிபர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்கிறார்கள். இரவு இன்னிசை கச்சேரி நடக்கிறது.
சிறப்பு பஸ்கள்
இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும் கோவில் அடிவாரத்தில் பக்தர்களின் வசதிக்காகவும், பாதுகாப்புக்காகவும், மருத்துவ குழுவினரும், தீயணைப்பு துறையினரும் தயார் நிலையில் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. பக்தர்களுக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
நாளை (சனிக்கிழமை) கொடியிறக்கம் மற்றும் சிறப்பு பட்டி மன்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாளைமறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மலர் பல்லக்கில் சாமி வீதி உலா வரும் நிகழ்ச்சியும், கிராமிய கரகாட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. வருகிற 2-ந் தேதி விடையாற்றி உற்சவம் மற்றும் மஞ்சள் நீராட்டுதலுடன் விழா நிறைவுபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.
Related Tags :
Next Story