தொடர்ந்து நீர் வரத்து அதிகரிப்பால் 2 நாளில் பவானிசாகர் அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்தது விவசாயிகள் மகிழ்ச்சி


தொடர்ந்து நீர் வரத்து அதிகரிப்பால் 2 நாளில் பவானிசாகர் அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்தது விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 30 March 2018 3:54 AM IST (Updated: 30 March 2018 3:54 AM IST)
t-max-icont-min-icon

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் 2 நாளில் பவானிசாகர் அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

பவானிசாகர், 

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 120 அடியாகும். இதில் 15 அடி சேறும், சகதியும் போக அணையின் கொள்ளளவு 105 அடியாக கணக்கிடப்படுகிறது. பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக நீலகிரி மலை உள்ளது.

இந்த அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட பகுதியில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும், பவானி ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் அரக்கன்கோட்டை, தடப்பள்ளி மற்றும் காலிங்கராயன் பாசன பகுதிகளை சேர்ந்த 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதிபெறுகின்றன. மேலும் ஈரோடு மாநகராட்சி, புஞ்சைபுளியம்பட்டி, சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பவானி ஆகிய நகராட்சிகள், பவானிசாகர், அரியப்பம்பாளையம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட பேரூராட்சிகள், 100-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகள் குடிநீர் வசதி பெறுகின்றன.

தண்ணீர் வரத்து அதிகரிப்பு

அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்யாததால் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. கடந்த 27-ந் தேதி காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 52.14 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 611 கன அடியாகவும் இருந்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு 1,768 கன அடி தண்ணீர் வந்தது.

நேற்று அணைக்கு வரும் நீர்வரத்து மேலும் அதிகரித்தது. காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 1,783 கன அடியாகவும், அணையின் நீர்மட்டம் 53.10 அடியாகவும் இருந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றில் வினாடிக்கு 200 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. கடந்த 2 நாளில் அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து உள்ளது. அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

Next Story