கொல்லன்கோவில் செல்லாண்டியம்மன் கோவில் தேரோட்டம் தீப்பந்தங்களை கையில் ஏந்தி பக்தர்கள் வழிபாடு
கொல்லன்கோவில் செல்லாண்டியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. அப்போது பக்தர்கள் தங்கள் கைகளில் தீப்பந்தங்களை ஏந்தி அம்மனை வழிபட்டனர்.
சிவகிரி,
சிவகிரி அருகே கொல்லன்கோவிலில் பிரசித்திபெற்ற செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தேர் திருவிழா கடந்த 20-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடந்தது. கடந்த 26-ந் தேதி இரவு 8 மணிக்கு கிராம சாந்தி மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.
தேரோட்டம்
இதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 3 மணி அளவில் கோவில் வளாகத்தில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.
இதையடுத்து மாவிளக்கு பூஜை நடந்தது. நள்ளிரவு 11.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. அப்போது தேரில் சிறப்பு அலங்காரத்தில் செல்லாண்டியம்மன் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர்.
தீப்பந்தங்களை கையில் ஏந்தி...
அப்போது ஏராளமான பக்தர்கள் இருபுறங்களிலும் நின்றபடி தீப்பந்தங்களை கையில் ஏந்தி அம்மனை வழிபட்டனர். அதாவது வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், தங்களுடைய கையில் தீப்பந்தங்களை ஏந்தி தேர் வரும் பாதையில் நின்றபடி அம்மனை வழிபடுவது ஐதீகமாக உள்ளது. எனவேதான் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் தீப்பந்தங்களை கையில் ஏந்தி நின்றனர்.
கோவிலை தேர் சுற்றி வந்த பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நேற்று இரவு ஊஞ்சல் உற்சவமும், சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலாவும் நடந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறும் சிறப்பு பூஜை மற்றும் மறு அபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
Related Tags :
Next Story