பவானியில் காலிங்கராயன் மணி மண்டபம் கட்டும் பணி தீவிரம்
பவானியில் காலிங்கராயன் மணி மண்டபம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.
பவானி,
பவானி காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் காலிங்கராயனுக்கு மணி மண்டபம் அமைக்கப்படும் என தமிழக அரசு கடந்த 2013-ம் ஆண்டு அறிவித்தது. மேலும் மணி மண்டபம் அமைக்க அரசின் சார்பில் ரூ.1 கோடியே 65 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் காலிங்கராயன் மணி மண்டபம் அமைக்கும் பணி தொடங்கியது. இந்த பணி கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மணி மண்டபம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக நல அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன.
எம்.எல்.ஏ. பார்வையிட்டார்
இதையடுத்து கடந்த சில நாட்களாக மணி மண்டபம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக அங்குள்ள சிலை பீடத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான 7 அடி உயரம் மற்றும் 600 கிலோ எடை கொண்ட காலிங்கராயனின் முழு உருவ வெண்கல சிலை பொருத்தப்பட்டு உள்ளது. மண்டபத்தின் சுற்றுப்புற பகுதியில் உள்ள பூங்காவில் பூச்செடிகள் மற்றும் மின் விளக்குகள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் மணி மண்டபம் கட்டும் பணியை ஈரோடு மேற்கு தொகுதி கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. பார்வையிட்டு பணிகளை தீவிரப்படுத்தும்படி அங்கிருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். அப்போது அவருடன் ஈரோடு மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிச்சாமி, மண்டலக்குழு முன்னாள் தலைவர் மனோகர், எலவமலை கூட்டுறவு வங்கி தலைவர் மகேஸ்வரன், ஈரோடு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் பூவேந்திர குமார், காலிங்கராயன் பாசன விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த பவிஷ் நல்லசிவம், வேணிரவி, பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story