21 மாத ஊதியக்குழு நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும்


21 மாத ஊதியக்குழு நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 30 March 2018 5:22 AM IST (Updated: 30 March 2018 5:22 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய 21 மாத ஊதிய நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்க வலியுறுத்தி அரசு ஊழியர் சங்க விருதுநகர் மாவட்ட பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விருதுநகர்,

விருதுநகர் அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் மாவட்ட தலைவர் முத்துராஜ் தலைமையில் நடைபெற்றது. மாநில செயலாளர் பன்னீர்செல்வம் பேரவையை தொடங்கி வைத்து பேசினார். அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகி களான வைரமுத்து, குருசாமி உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். மாவட்ட துணைத்தலைவர்கள் சிவக்குமார், மாரியப்பன், மாரிமுத்து, இணை செயலாளர் செல்வின் கியோர் தீர்மானங்களை முன் மொழிந்து பேசினர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்துசெய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அமைச்சு பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து நிலையிலான அரசு ஊழியர்கள், களப்பணியாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள், வாகன ஓட்டுனர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாடுகளை களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊராட்சி செயலாளர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புற நூலகர்கள், பகுதி நேர சிறப்பாசிரியர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய 21 மாத ஊதிய நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்க வேண்டும். அரசு பணிகளை ஒப்பந்தமயமாக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ள ஆதிஷேசைய்யா குழுவினை கலைக்க வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகள் தனி அலுவலர்களின் நிர்வாகத்தில் இருப்பதால் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் அவர்களுக்கு அதிக பணிச்சுமை ஏற்படுகிறது. எனவே மேலும் தாமதிக்காமல் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனை தொடர்ந்து முன்னாள் மாநில பொதுசெயலாளர் பாலசுப்பிரமணியன், மாநில துணைத்தலைவர் குமரவேல் ஆகியோர் நிறைவுரையாற்றினர். காலியாக உள்ள நிர்வாக பொறுப்புகளான மாவட்ட தலைவர் பொறுப்புக்கு லட்சுமிநாராயணனும், மாவட்ட இணை செயலாளராக ராம்குமாரும் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட இணை செயலாளர் புகழேந்தி வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் கண்ணன், மாவட்ட பொருளாளர் சிவஞானம் ஆகியோர் வேலை மற்றும் வரவு-செலவு அறிக்கைகளை சமர்ப்பித்தனர். மாநில மகளிர் துணைக்குழு உறுப்பினர் அய்யம்மாள் நன்றி கூறினார்.

Next Story