ஜெர்மனியில் தமிழ்க் கல்வி


ஜெர்மனியில் தமிழ்க் கல்வி
x
தினத்தந்தி 30 March 2018 5:45 AM GMT (Updated: 30 March 2018 5:15 AM GMT)

தமிழக அரசின் பேருதவியோடு அமெரிக்கா நாட்டில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு தமிழ் இருக்கை அமைக்கப்பட்டது என்பது பன்னாட்டு தமிழ் ஆராய்ச்சியாளர் குழுவிற்குள்ளே பெரும் மகிழ்ச்சி பரவிவிட்டது.

ஜெர்மனி நாட்டில், கொலோன் நகரத்தின் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ் ஆராய்ச்சி மையத்தை பற்றி ஒரு சில குறிப்புகள் தெரிவிக்க விரும்புகிறோம்.

கொலோன், உலகத்தில் மிகவும் பழமைவாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்று. 1388-ம் ஆண்டில் ஐரோப்பிய கண்டத்தில் நான்காவது பல்கலைக்கழகமாக தோற்றுவிக்கப்பட்டது (மற்ற 3 பல்கலைக்கழகங்கள் வருமாறு, 1348-ம் ஆண்டில் பிராகு பல்கலைக்கழகம், 1365-ம் ஆண்டில் வியன்னா பல்கலைக்கழகம், 1386-ம் ஆண்டில் ஹைடல்பெர்க் பல்கலைக்கழகம்).

இந்த பழமையான பேர் பெற்ற கல்வி மையத்தில் ஏறத்தாழ ஐம்பது வருடங்களுக்கு முன்பு ஒரு “இந்தோலொஜி” (இந்தியாவைப் பற்றி ஆராய்ச்சி செய்யும்) துறை அமைக்கப்பட்டது. அப்போது, அயல் நாடுகளில் எல்லா இந்தோலொஜி துறைகளிலும் வடமொழி ஆராய்ச்சிக்கும், இந்தி ஆராய்ச்சிக்கும் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கொலோன் பல்கலைக்கழக இந்தோலொஜி துறையில் மட்டும், ஆரம்பத்திலிருந்து (அதாவது 1963-ம் ஆண்டிலிருந்து) தமிழுக்கும் மற்ற திராவிட மொழிகளுக்கும் முதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

1963-ம் ஆண்டில் ஒரு தமிழ் நூலகம் அமைக்கப்பட்டது. அங்கே தற்போது ஏறத்தாழ 40 ஆயிரம் தமிழ் நூல்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன அதற்குள்ளே நிறைய 19-ம் நூற்றாண்டிலும், 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் அச்சிடப்பட்ட முதல் பதிப்புகள் ஏராளமானவை இருக்கின்றன. தமிழ் பத்திரிகைகளும் பெரிய அளவில் வைக்கப்பட்டு உள்ளன.

கொலோன் தமிழ்த்துறையில், தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியம் முதல், இக்காலத் தமிழ் இலக்கியம் மற்றும் நாட்டுப்புற இலக்கியம் வரை, ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. கணினி மூலம், இணையத்தில் சில தமிழகராதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

2016-ம் ஆண்டில், பொங்கல் நாள் அன்று, கொலோன் தமிழ்த்துறையில், ஒரு திருக்குறள் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது. அதைத்தவிர, தமிழ் கலாசாரத்தில் பெரிய ஆர்வத்தோடு ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது (அதாவது நாட்டுப்புறக் கலைகள், நாட்டுப்புற இலக்கியங்கள், நீலகிரியில் வசிக்கும் ஆதிவாசிகளின் கலாசாரம் முதலியன தொடர்பாக).

ஜெர்மனியில் எங்கேயாவது பொது நூலகங்களில் சேர்க்கப்பட்டுள்ள தமிழ் ஓலைச் சுவடிகளை ஆராயப்பட்டு அட்டவணையில் விவரிக்கப்படுகின்றன. கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை காலப்போக்கில் ஒரு முழு தமிழ் ஆராய்ச்சி மையமாக வளர்ந்து வந்தது என்று சொல்ல முடியும்.

இப்படிப்பட்ட துறை தற்போது தன்னுடைய சொந்த பல்கலைக்கழகத்தின் ஆதரவை இழந்து, மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த துறையை இயக்கும் நான்(பேராசிரியை ‘உல்ரீகெ நிக்லாஸ்’) சில வருடங்கள் கழித்து ஓய்வு பெரும்போது, கொலோன் பல்கலைக்கழகம் இந்த தமிழ் துறையை மூட முடிவு எடுத்துவிட்டது. அது பன்னாட்டு தமிழ் ஆராய்ச்சிக்கு பெரிய இழப்பு ஆகும். அதன் பிறகு அந்த சிறந்த தமிழ் நூலகத்தின் விதி என்ன ஆகும்? என்பது யாருக்கும் தெரியாது.

- பேராசிரியை உல்ரீகெ நிக்லாஸ், ஜெர்மனி

Next Story