காதுகேளாமையை நீக்க 2 குழந்தைகளுக்கு ‘காக்ளியர் இம்பிளாண்ட்’ அறுவை சிகிச்சை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் முதல் முறையாக நடந்தது


காதுகேளாமையை நீக்க 2 குழந்தைகளுக்கு ‘காக்ளியர் இம்பிளாண்ட்’ அறுவை சிகிச்சை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் முதல் முறையாக நடந்தது
x
தினத்தந்தி 31 March 2018 3:00 AM IST (Updated: 30 March 2018 11:58 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் முதல் முறையாக காது கேளாமையால் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளுக்கு ‘காக்ளியர் இம்பிளாண்ட்’ அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் முதல் முறையாக காது கேளாமையால் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளுக்கு ‘காக்ளியர் இம்பிளாண்ட்’ அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இது குறித்து டாக்டர் மோகன் காமேசுவரன் நிருபர்களிடம் கூறியதாவது:–

காதுகேளாமை


உலக அளவில் 1000 குழந்தைகளுக்கு ஒரு குழந்தை காது கேளாமையால் பாதிக்கப்படுகிறது. இந்திய அளவில் 1000–க்கு 2 குழந்தைகளும், தமிழ்நாடு அளவில் 1000–க்கு 6 பேர் காதுகேளாமையால் பாதிக்கப்படுகின்றனர். பிறவியில் குழந்தைகளுக்கு அதிகம் ஏற்படும் ஊனம் காது கேளாமை. காது கேட்கவில்லை என்றால் பேச்சுவராது. ஆகையால் பெற்றோர்கள் இதனை உடனடியாக கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

இதில், காது கேளாமையால் பாதிக்கப்பட்ட 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ‘காக்ளியர் இம்பிளாண்ட்’ அறுவை சிகிச்சை செய்வதால் நல்ல முறையில் காது கேட்கும்.

இந்த சிகிச்சைக்கு சுமார் ரூ.10 லட்சம் வரை செலவாகும். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் இலவசமாக இதுவரை சுமார் 2 ஆயிரம் குழந்தைகளுக்கு ‘காக்ளியர் இம்பிளாண்ட்’ அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி

தற்போது முதல் முறையாக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் 2 குழந்தைகளுக்கு முதல்–அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ‘காக்ளியர் இம்பிளாண்ட்’ கருவி வெற்றிகரமாக பொருத்தப்பட்டு உள்ளது. எனது(டாக்டர் மோகன் காமேசுவரன்) தலைமையில் டாக்டர்கள் பாலசுப்பிரமணியன், செந்தில் அனிதா, மேரிநிர்மலா, சந்தாணகிருஷ்ணன், விஜயராகவன், இன்பரசு, மயக்கவியல் நிபுணர் முத்துகண்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் அறுவை சிகிச்சை செய்தோம். இதனால் தென்மாவட்டத்தை சேர்ந்த காதுகேட்காத மற்றும் வாய் பேச முடியாத 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இந்த அறுவை சிகிச்சையை செய்து பயனடையலாம்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, தூத்துக்குடி உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி உடன் இருந்தார்.

Next Story