ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் புதுச்சேரியில் இருந்து தூத்துக்குடி வந்தது


ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் புதுச்சேரியில் இருந்து தூத்துக்குடி வந்தது
x
தினத்தந்தி 31 March 2018 2:45 AM IST (Updated: 31 March 2018 12:04 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி புதுச்சேரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பயணமாக தூத்துக்குடி வந்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி புதுச்சேரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பயணமாக தூத்துக்குடி வந்தனர்.

ஸ்டெர்லைட் ஆலை

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் புதுச்சேரியை சேர்ந்த மகேசுவரி என்பவர், தனது நண்பர்களான நிவாஷ் ராம்நாத், நவீன், கார்த்திக், பிரபாகரன், ஜெயபிரகாஷ் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் புதுச்சேரியில் இருந்து சுமார் 500 கிலோ மீட்டர் பயணம் செய்து நேற்று காலையில் தூத்துக்குடிக்கு வந்தார். அங்கிருந்து அ.குமரெட்டியபுரத்துக்கு சென்றனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த மக்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.

விழிப்புணர்வு

அப்போது மகேசுவரி நிருபர்களிடம் கூறும் போது, தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையால் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகவும், ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நான் எனது நண்பர்களுடன் இணைந்து இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளேன். மக்கள் நலன் கருதி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று கூறினார்.

இந்த மகேசுவரி ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்லூரி மாணவர்கள் ஆதரவு

இந்தநிலையில் அ.குமரெட்டியபுரம் கிராமத்தில் நேற்று 47–வது நாளாக போராட்டம் நடந்தது. போராட்டக்குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

தொடர் போராட்டம் நடத்தி வரும் கிராம மக்களுக்கு மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் நேற்று ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Next Story