திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 31 March 2018 3:00 AM IST (Updated: 31 March 2018 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பங்குனி உத்திர திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று பங்குனி உத்திர திருவிழா நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமா£த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. தொடந்து 5.30 மணிக்கு கோவிலில் இருந்து வள்ளி அம்பாள் தபசுக்காக, ஆனந்தவல்லி சமேத சிவகொழுந்தீஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளினார்.

பின்னர் மாலை கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி சன்னதி தெரு வழியாக ஆனந்தவல்லி சமேத சிவகொழுந்தீஸ்வரர் கோவிலுக்கு சென்றார். தொடர்ந்து சுவாமியும், அம்பாளும் கீழ ரதவீதி, பந்தல் மண்டபம் முகப்பிற்கு சென்றனர். அங்கு சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவிலை சேர்ந்தனர். இரவு கோவிலில் 108 மகாதேவர்கள் சன்னதி முன்பு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், வள்ளியம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது.

திரளான பக்தர்கள்

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல ஆயிரம் பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். தூத்துக்குடி, நெல்லை பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்தனர். பாதையாத்திரை பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம், காவடி எடுத்தும் தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.

பல்லாயிரம் பக்தர்களும் கடலில் புனித நீராடி கோவில் வளாகத்தில் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உபகோவிலான நாலுமூலைக்கிணறு குன்றுமேலய்யன் சாஸ்தா கோவிலிலும் பங்குனி உத்திரத்திர திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா. கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Next Story