வீடுகள், கடைகளில் கருப்புக்கொடி ஏற்றி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்


வீடுகள், கடைகளில் கருப்புக்கொடி ஏற்றி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 March 2018 3:30 AM IST (Updated: 31 March 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பா.ம.க.வினர் வீடுகள், கடைகளில் கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக சுப்ரீம் கோர்ட்டு விதித்த காலக்கெடு முடிவடைந்து விட்டது. இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்து தர்மபுரி மாவட்ட பா.ம.க. சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடைபெற்றது.

தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, நல்லம்பள்ளி, அதியமான்கோட்டை, சாமிசெட்டிப்பட்டி, ஏலகிரி, குரும்பட்டி, காரிமங்கலம், அரூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், கம்பைநல்லூர், ஏரியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகள், கடைகளில் கருப்புக்கொடியேற்றி மத்திய அரசுக்கு பா.ம.க.வினர் கண்டனம் தெரிவித்தனர்.

இதன் ஒரு பகுதியாக தர்மபுரி நகரில் பல்வேறு இடங்களில் வீடுகள் மற்றும் கடைகளில் கருப்புக்கொடி ஏற்றி பா.ம.க.வினர் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பென்னாகரம் ரோட்டில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க. மாநில துணைபொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சண்முகம், மாநில இளைஞர் சங்க செயலாளர் முருகசாமி, மாவட்ட நிர்வாகிகள் டி.ஜி.மணி, சுப்பிரமணியன், சின்னசாமி மற்றும் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கருப்புக் கொடிகளுடன் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தண்ணீரை கர்நாடக அரசு முறையாக வழங்க வேண்டும். கர்நாடக மாநில சட்டசபை தேர்தலை காரணம் காட்டி மத்தியஅரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பொறுப்பை தட்டிக்கழிக்கக்கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story