அ.தி.மு.க. எம்.பி. முத்துக்கருப்பன் ராஜினாமா செய்ய முடிவு திங்கட்கிழமை கடிதம் கொடுக்கப்போவதாக பேட்டி


அ.தி.மு.க. எம்.பி. முத்துக்கருப்பன் ராஜினாமா செய்ய முடிவு திங்கட்கிழமை கடிதம் கொடுக்கப்போவதாக பேட்டி
x
தினத்தந்தி 31 March 2018 5:00 AM IST (Updated: 31 March 2018 5:55 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து, ராஜினாமா செய்ய முடிவு செய்து இருப்பதாக அ.தி.மு.க. எம்.பி. முத்துக்கருப்பன் கூறினார். #Muthukaruppan #CauveryIssue

புதுடெல்லி, 

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து, ராஜினாமா செய்ய முடிவு செய்து இருப்பதாக அ.தி.மு.க. எம்.பி. முத்துக்கருப்பன் கூறினார்.

நாடாளுமன்ற மாநிலங்களவை அ.தி.மு.க. உறுப்பினர் முத்துக்கருப்பன். திருநெல்வேலியைச் சேர்ந்த இவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகின்றன. இவரது பதவிக்காலம் இன்னும் 2 ஆண்டுகள் உள்ளது. இந்த நிலையில் முத்துக்கருப்பன், தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டெல்லியில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் அ.தி.மு.க.காரன். எந்த கட்சிக்கும் போகாதவன். மக்களின் உணர்வுகளை புரிந்து செயல்படுபவன். விவசாயிகளின் கஷ்டத்தை என்னால் தாங்க முடியவில்லை. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி பிரதமர் மோடியிடமும், பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷாவிடமும் தனிப்பட்ட முறையில் பேசி இருக்கிறேன். ஆனால் அவர்கள் வாயே திறக்கவில்லை. மக்கள் குடிப்பதற்குக்கூட தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள். இந்த நிலையில் எனக்கு பதவி என்ன வேண்டிக்கிடக்கிறது?

அதனால் எனது எம்.பி. பதவியை நான் ராஜினாமா செய்ய முடிவு செய்து உள்ளேன். இந்த அறிவிப்பு வாய்மொழியாக மட்டும் இருக்காது. கண்டிப்பாக ராஜினாமா செய்வேன். இதில் எந்த சமாதானமும் இல்லை. அடுத்த கூட்டத்தில் (திங்கட்கிழமை) நான் எனது ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவை தலைவரான துணை ஜனாதிபதியிடம் ஒப்படைப்பேன்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய 2 பேரும் என் உடன்பிறவா சகோதரர்கள். அவர்களை மிகவும் மதிக்கிறேன். அவர்கள் கட்சியை திறமையாக நடத்துகிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததை கண்டித்து உண்ணாவிரதம் அறிவித்து உள்ளனர். எம்.பி.க்களாகிய நாங்கள் பாராளுமன்றத்தை நடத்தவிடாமல் செய்தோம். இதைவிட எப்படி அழுத்தம் தர முடியும்?

ராஜினாமா செய்வது பற்றி முதல்-அமைச்சரிடமும், துணை முதல்அமைச்சரிடமும் நான் ஆலோசனை கேட்கவில்லை. இது தன்னிச்சையாக நான் எடுத்த முடிவு.

மத்திய அரசு தமிழகத்துக்கு தர வேண்டிய நிதியை திட்டமிட்டே தரவில்லை. கர்நாடக தேர்தலை கருத்தில்கொண்டே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. அரசியலுக்காக தமிழகத்தை மத்திய அரசு ஏன்தான் இப்படி நடத்துகிறது என்று தெரியவில்லை. இப்படி ஒரு மத்திய அரசு நமக்கு தேவையா? மக்கள் பிரச்சினையில் பாரதீய ஜனதா அரசியல் செய்யக்கூடாது.

நவநீதகிருஷ்ணன் எம்.பி. தற்கொலை செய்வதாக கூறினார். தற்கொலை செய்வதால் என்ன நடந்து விடும்?. உயிரோடு இருந்தால்தான் போராட முடியும். நான் ராஜினாமா செய்கிறேன். இதைவிட வேறு என்ன செய்ய முடியும்?

பதவி விலகும் முடிவை மாற்றிக் கொள்ளுமாறு முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் என்னிடம் கூறினால் அவர்களிடம், மற்ற எம்.பி.க்களையும் ராஜினாமா செய்ய சொல்லுமாறு வலியுறுத்துவேன். எனது முடிவில் இருந்து மாற மாட்டேன். நான் திருநெல்வேலிக் காரன். சொன்னால் சொன்னதுதான். மாற்றிச் சொல்லமாட்டேன்.

இவ்வாறு முத்துக்கருப்பன் எம்.பி. கூறினார்.

Next Story