கடனை திருப்பி தராமல் கணவரின் நண்பர் மோசடி செய்ததால் மகன் - மகளுடன் பெண் தூக்குப்போட்டு தற்கொலை


கடனை திருப்பி தராமல் கணவரின் நண்பர் மோசடி செய்ததால் மகன் - மகளுடன் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 31 March 2018 3:00 AM IST (Updated: 31 March 2018 2:49 AM IST)
t-max-icont-min-icon

கடனை திருப்பித் தராமல் கணவரின் நண்பர் மோசடி செய்ததால் மனமுடைந்த பெண் தன்னுடைய மகன், மகளுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஹலகூர்,

கடனை திருப்பித் தராமல் கணவரின் நண்பர் மோசடி செய்ததால் மனமுடைந்த பெண் தன்னுடைய மகன், மகளுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.

திருமண செலவுக்காக...


மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா ஹலகூரு அருகே குடகட்டே கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவருடைய மனைவி சுனிதா(வயது 30). இந்த தம்பதியின் மகள் பிரியங்கா(15), மகன் பிரஜ்வல்(13). இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஜெகதீசின் நண்பரான மோகன் என்பவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமண செலவுக்காக மோகன் சுனிதாவிடம் இருந்து கடனாக ரூ.1¼ லட்சம் மற்றும் 150 கிராம் தங்க நகைகளை வாங்கியதாக தெரிகிறது.

ஆனால் திருமணமாகி 6 மாதங்களாகியும் மோகன் கடனையும், நகையையும் திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் ஜெகதீசுக்கும், சுனிதாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் இதுதொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் ஜெகதீஷ் இந்த கடன் விவகாரத்தை வைத்து சுனிதாவுக்கும், மோகனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு உள்ளதாக தவறாக பேசி விமர்சித்து வந்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை


இதனால் மனமுடைந்து காணப்பட்ட சுனிதா, கடந்த சில நாட்களுக்கு முன்பு மோகனை சந்தித்து தான் கொடுத்த நகைகள், பணத்தை திருப்பி கொடுக்கும்படி கேட்டார். ஆனால், மோகன் பணத்தை கொடுக்க மறுத்ததுடன் தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. மேலும் பணத்தையும், நகைகளையும் திருப்பித்தராமல் மோசடி செய்துவிட்டார். இதனால் மேலும் மனமுடைந்த சுனிதா, தனது மகள் பிரியங்கா, மகன் பிரஜ்வல் ஆகியோருடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் சுனிதா தனது மகன் மற்றும் மகளுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று காலை நீண்டநேரமாக சுனிதாவின் வீட்டு கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அப்பகுதியினர் அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் ஒரு அறையில் சுனிதா தனது மகள், மகனுடன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து மலவள்ளி புறநகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

உருக்கமான கடிதம்

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சுனிதா, பிரியங்கா, பிரஜ்வல் ஆகியோரது உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் சுனிதாவின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது சுனிதா எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது.

அதில் என்(சுனிதா) சாவுக்கு எனது கணவர் ஜெகதீசும், அவருடைய நண்பர் மோகனும் தான் காரணம் என்று எழுதியிருந்ததாக கூறப்படுகிறது. அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் அதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சுனிதா, பிரியங்கா, பிரஜ்வல் ஆகியோரது உடல்கள பிரேத பரிசோதனைக்காக மண்டியா மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக மலவள்ளி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரும் சோகம்

கடனை திருப்பித் தராமல் கணவரின் நண்பர் மோசடி செய்ததால் மனமுடைந்த பெண் தன்னுடைய மகன், மகளுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story