தேரோட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியல்


தேரோட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியல்
x
தினத்தந்தி 31 March 2018 2:59 AM IST (Updated: 31 March 2018 2:59 AM IST)
t-max-icont-min-icon

எருமப்பட்டியில் தேரோட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

எருமப்பட்டி,

எருமப்பட்டி மெயின்ரோடு அருகே கடைவீதி பகுதியில் உள்ள அக்னி மாரியம்மன் கோவில் திருவிழா இருதரப்பினர் பிரச்சினை காரணமாக 18 ஆண்டுகளாக நடைபெறவில்லை. கடந்த ஆண்டு பேச்சுவார்த்தை நடத்தி விழா நடத்தப்பட்டது. இந்த ஆண்டு விழா நடைபெற்றபோது, கடந்த புதன்கிழமை மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடந்தது. அப்போது அக்னி மாரியம்மன் சாமியை ஐந்துரோடு, பழனிநகர் வழியாக கொண்டுசெல்ல அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பிரச்சினை ஏற்பட்டது.

பின்னர் பேச்சுவார்த்தைக்கு பிறகு சாமியை ஐந்துரோடு, பழனிநகர் பகுதிக்கு கொண்டு செல்லாமல் மீண்டும் கோவிலுக்கு கொண்டு சென்று விழா முடிந்தது. இதையடுத்து அக்னி மாரியம்மன் கோவில் தரப்பினர், தங்கள் சாமி ஊர்வலத்துக்கு ஐந்துரோடு, பழனிநகர் பகுதிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். அப்போது போலீசாரிடம் அனுமதி பெறாமல் யாரும் திருவிழா நடத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று ஐந்துரோடு, பழனிநகர் பகுதி பொதுமக்கள் சார்பில் பங்குனி உத்திரத்தையொட்டி பாலதண்டாயுதபாணி கோவில் தேரோட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். இதையடுத்து அவர்கள் எருமப்பட்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு, கடந்த 32 ஆண்டுகளாக நாங்கள் தேரோட்டம் நடத்தி வருகிறோம். எனவே எங்களுக்கு தேரோட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். அப்போது கடைவீதியை தவிர்த்து மெயின்ரோடு உள்ளிட்ட மற்ற பகுதிகளில் பாலாதண்டாயுதபாணி சாமியை கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் அக்னி மாரியம்மன் கோவில் தரப்பினர், அவர்களது பகுதிக்கு எங்கள் சாமி ஊர்வலத்துக்கு அனுமதிக்கவில்லை. இப்போது அவர்கள் சாமி தேரோட்டத்துக்கு மெயின்ரோடு பகுதியில் வர எப்படி அனுமதிக்கிறீர்கள் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, மெயின்ரோடு பகுதியில் தேரோட்டம் நடத்தக்கூடாது என்று கூறி சாலைமறியலிலும் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாலதண்டாயுதபாணி தேரோட்டம் மட்டும் இப்போது நடைபெறட்டும்.

மற்ற விழாக்களுக்கு பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி திருவிழா நடத்துவது குறித்து முடிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பாலதண்டாயுதபாணி கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

Next Story