சேலம் விமானநிலையம் அருகே மாவட்ட வருவாய் அதிகாரியை காருடன் பொதுமக்கள் சிறைபிடிப்பு தர்ணா போராட்டத்தால் பரபரப்பு
சேலம் விமானநிலையம் அருகே மாவட்ட வருவாய் அதிகாரியை பொதுமக்கள் காருடன் சிறைபிடித்தனர். மேலும் அவர்கள் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓமலூர்,
ஓமலூரை அடுத்த காமலாபுரத்தில் சேலம் விமான நிலையத்தை கடந்த 25-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அப்போது அவர், 570 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவித்தார். இந்தநிலையில் அதிகாரிகள் நில ஆர்ஜிதத்திற்கு சென்ற போதெல்லாம் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராடி வந்தனர்.
இந்தநிலையில் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க ‘சிக்னல்‘ குறைவாக இருப்பதாக தெரிகிறது. இதனையடுத்து நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமாரன், மேட்டூர் உதவிகலெக்டர்(பொறுப்பு) ராமதுரை முருகன், ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சவுந்தரராஜன், காடையாம்பட்டி தாசில்தார் பெரியசாமி, மற்றும் வருவாய் துறையினர் தும்பிபாடி ஊராட்சி குருவரெட்டியூர் பெருமாள்கோவில் கரட்டின் உச்சிக்கு சென்று ‘சிக்னல்‘ கோபுரம் அமைக்க முடியுமா? என்பது குறித்து விமான நிலைய அலுவலர்களுடன் பார்வையிட்டனர்.
மாவட்ட வருவாய் அதிகாரி சிறைபிடிப்பு
இதுபற்றி தகவல் அறிந்த அக்கம்பக்கத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு திரண்டு, தங்கள் விவசாய நிலத்தினை ஆர்ஜிதம் செய்ய விடமாட்டோம் என கூறி கதறி அழுதனர். பின்னர் கீழே இறங்கி வந்த வருவாய் துறையினர் பொதுமக்களின் கோரிக்கையினை கேட்காமல் காரில் ஏறி செல்ல முயன்றனர்.
இதனையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை 11 மணியளவில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமாரை காருடன் சிறைபிடித்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் காரில் இருந்து இறங்கி வந்து நிலத்தை ஆர்ஜிதம் செய்ய மாட்டோம் என உத்தரவாதம் கொடுத்தால்தான் போராட்டத்தினை கைவிடுவதாக தெரிவித்தனர். ஆனால் ஒருமணி நேரத்திற்கு மேலாகியும் காரில் இருந்து மாவட்ட வருவாய் அலுவலர் இறங்கி வரவில்லை. பின்னர் பொதுமக்கள் தரப்பில் 5 பேர் மட்டும் பேசலாம் என முடிவு செய்து அவர்களுடன் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கூச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மீண்டும் காரில் ஏறி அமர்ந்துகொண்டார். எனவே பொதுமக்கள் மீண்டும் காரை சிறைபிடித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஆராயி(வயது58), கமலா(60) ஆகிய 2 பெண்கள் மயக்கமடைந்தனர். இதனால் அவர்களை பொதுமக்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
கலைந்து சென்றனர்
பின்னர் போலீசார், பொதுமக்களிடம் தற்போது ‘சிக்னல்‘ அமைக்க மட்டுமே கரட்டில் அரசு புறம்போக்கு நிலத்தை பார்க்க வந்ததாகவும், நிலம் எடுப்பவர்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்கப்படும் எனவும், அவர்கள் ஆட்சேபனையினை மாவட்ட கலெக்டர் அலுவலகம் சென்று நில எடுப்பு அதிகாரிகளை சந்தித்து தெரிவிக்கலாம் எனவும் கூறினர். இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் மதியம் 1 மணியளவில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் அங்கிருந்து கிளம்பி சென்றார். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் மற்றும் வருவாய் துறையினரை பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story