காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து வீடு, கடைகளில் கருப்புக்கொடி கட்டி பா.ம.க.வினர் போராட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து வீடு, கடைகளில் கருப்புக்கொடி கட்டி பா.ம.க.வினர் போராட்டம்
x
தினத்தந்தி 31 March 2018 3:11 AM IST (Updated: 31 March 2018 3:11 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து சேலத்தில் வீடு, கடைகளில் கருப்புக்கொடி கட்டி பா.ம.க.வினர் போராட்டம் நடத்தினார்கள்.

சேலம்,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து நேற்று சேலத்தில் பா.ம.க.வினர் கடை மற்றும் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் செவ்வாய்பேட்டை மெயின் ரோட்டில் உள்ள கடை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் அருள் தலைமையில் நிர்வாகிகள் கருப்புக்கொடிகளை வழங்கியும், கடை முன்பு கட்டியும் போராட்டம் நடத்தினர்.

மேலும் பா.ம.க.வினர் தங்களது வீடுகளிலும் கருப்புக்கொடி கட்டியிருந்தனர். இந்த போராட்டத்தில், பா.ம.க. மாநகர் மாவட்ட செயலாளர் கதிர்.ராசரத்தினம், பசுமை தாயக மாநில துணை அமைப்பாளர் சத்ரியசேகர், பா.ம.க. துணை செயலாளர்கள் அண்ணாமலை, செல்வம் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மத்திய அரசுக்கு கண்டனம்

இது தொடர்பாக மாநில துணை பொதுச்செயலாளர் அருள் கூறுகையில்,“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு நழுவ பார்ப்பது கோர்ட்டு அவமதிப்பு செயலாகும். தமிழகத்தை வஞ்சிக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுகிறது. மேலும் விவசாய நிலங்களை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம், நியூட்ரினோ திட்டம், மீத்தேன், கெயில் போன்றவற்றை செயல்படுத்துவதையும் கண்டிக்கிறோம்” என்றார். 

Next Story