26 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள திட்டம்: மாமல்லபுரத்தில் போக்குவரத்து நெரிசலால் சுற்றுலா பயணிகள் அவதி
மாமல்லபுரத்தில் தற்காலிக குறுகிய பஸ் நிலையத்தால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
மாமல்லபுரம்,
‘யுனெஸ்கோவால்’ அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரத்துக்கு நாள்தோறும் ஏராளமான வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள பல்லவர் கால குடைவரை மண்டபங்கள், கோவில்கள், சிற்பங்கள் உலகப்புகழ் பெற்ற பாரம்பரிய சின்னங்களாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த மாமல்லபுரத்தில், இன்னும் நவீன பஸ் நிலையம் அமைக்கப்படவில்லை. தற்போது இங்குள்ள தலசயன பெருமாள் கோவில் எதிரே குறுகிய இடத்தில் திறந்தவெளி பகுதியே தற்காலிக பஸ் நிலையமாக 50 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
தினமும் இந்த குறுகிய பஸ் நிலையத்தில் 200-க்கும் மேற்பட்ட அரசு, தனியார், மாநகர பஸ்கள் வந்து செல்கின்றன. ஒரே நேரத்தில் பல பஸ்கள் வருவதால் இங்கு நிறுத்த இடமில்லாத நிலை உள்ளது. இதனால் இங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பல மணிநேரம் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
அடிப்படை வசதி இல்லை
இந்த குறுகிய பஸ் நிலையத்தில் குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. அங்கு ஒரே ஒரு குடிநீர் தொட்டி உள்ளது. ஆனாலும் அதில் உள்ள குழாயை திறந்தால் காற்றுதான் வருகிறதே தவிர, பல வருடமாக குடிநீர் வருவதில்லை.
சுற்றுலா வரும் பெண்கள் தங்கள் அவசர தேவைக்கு கழிப்பிடம் செல்லகூட இங்கு கழிப்பிட வசதி இல்லை. இதனால் அவர்கள், கழிப்பிடம் செல்லவேண்டும் என்றால்கூட உணவருந்தும் ஓட்டல்களுக்கு செல்லும் அவலநிலை உள்ளது.
நவீன பஸ் நிலையம்
இந்த சூழலில் கடந்த 1992-ம் ஆண்டு சுற்றுலா பகுதிக்கு ஏற்ப நவீன பஸ் நிலையம் அமைக்க அரசு முடிவெடுத்தது. அதன்படி மாமல்லபுரம் கருக்காத்தம்மன் கோவில் எதிரில், கிழக்கு கடற்கரை சாலையை ஓட்டி உள்ள 6 ஏக்கர் இடத்தில் நவீன பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பொதுப்பணித்துறையிடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டன. அதற்கான வரைபடங்களையும் மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் தயாரிக்கப்பட்டது.
புதிய பஸ் நிலைய பணிக்காக அங்கிருந்த 10 குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, அவர்களுக்கு மாற்று இடமும் வழங்கப்பட்டது. புதுநகர் வளர்ச்சி குழும நிர்வாகம் பஸ் நிலைய பணிக்காக வருவாய்த்துறை மூலம் 6 ஏக்கர் நிலத்தை ஆர்ஜிதம் செய்து பொதுப்பணித்துறையிடம் ஒப்படைத்தது.
மண் பரிசோதனையும் செய்யப்பட்டு, பஸ் நிலையத்துக்கு உகந்த இடம் என்று சான்றிதழும் பெறப்பட்டது. பிறகு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டதோடு சரி. அதன்பிறகு பல ஆண்டுகளாக அரசு இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
புதர் மண்டி கிடக்கிறது
கடந்த 26 ஆண்டுகளாக இந்த திட்டம் கிடப்பில் உள்ளது. ஆனால் அதிகாரிகள் அடிக்கடி மாமல்லபுரம் வந்து பஸ் நிலையம் அமைப்பதற்காக ஆய்வு செய்கின்றனரே தவிர, பணிகளை தொடங்குவதற்கான எந்தவித ஏற்பாடுகளையும் செய்யவில்லை.
புதிய பஸ் நிலையத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 6 ஏக்கர் நிலமும் தற்போது செடிகள், சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து, புதர்மண்டி காட்சி அளிக்கிறது.
தற்போதுள்ள குறுகிய பஸ் நிலையத்தில் பஸ்களை நிறுத்த போதுமான இடவசதி இல்லாததால் அங்கு நிற்கும் பஸ்கள் ஒன்றோடு ஒன்று உரசியும், மோதும் வகையிலும் நிற்கவேண்டிய அவல நிலை உள்ளது. அங்குள்ள பஸ் நிழற்குடை பகுதியில் சுமார் 10 பேர் மட்டும் அமரும் வகையில் குறைந்த இருக்கை வசதிகளே உள்ளது.
நிரந்தர பஸ் நிலையம் இல்லாததால் சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரிக்கு செல்லும் அரசு விரைவு பஸ்கள் மாமல்லபுரம் நகருக்குள் வருவது கிடையாது. அங்குள்ள புறவழிச்சாலையில் பயணிகளை இறக்கிவிட்டு சென்றுவிடுகிறது. இது குறித்து நடத்துனரிடம் பயணிகள் கேட்டால், “பஸ் நிலையத்தில் பஸ்களை நிறுத்த போதிய இடமில்லை. அதனால் ஊருக்குள் பஸ் போகாது” என்று காரணம் கூறி, தட்டி கழிக்கின்றனர்.
இதனால் சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் புறவழிச்சாலையில் இறங்கி, அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து மாமல்லபுரம் நகருக்குள் வரவேண்டிய அவலநிலை உள்ளது.
பொதுமக்கள் கோரிக்கை
இது குறித்து மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
பல ஆண்டுகளாக சர்வதேச தரத்துக்கு இணையாக பஸ் நிலையம் அமைக்கிறோம் என்று காஞ்சீபுரம் மாவட்டத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் இங்கு வந்து ஆய்வு செய்து செல்வதோடு சரி. இதுவரை பணிகளை தொடங்க ஆர்வம் காட்டவில்லை. தற்போது கோடை விடுமுறை தொடங்கியவுடன் அரசு பஸ் மூலம் மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் குறுகிய பஸ் நிலையத்தில் நிற்கும் பஸ்களில் இடம் பிடிக்க முண்டியடித்து செல்லும் நிலை ஏற்படும்.
தற்காலிக பஸ் நிலையத்தில் சிறப்பு பஸ்கள் நிற்க கூட இடவசதி இல்லை. பஸ்சுக்கு காத்து நிற்கும் சுற்றுலா பயணிகள் போதுமான இருக்கை வசதி இல்லாததால், வெயிலில் பலமணி நேரம் கால்கடுக்க நிற்கும் அவலநிலை உள்ளது. இந்த குறுகிய பஸ் நிலையத்தில் விடுமுறை தினங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
நிரந்தர பஸ் நிலையம் இல்லாததால் மாமல்லபுரம் நகரின் வளர்ச்சி பணிகள் அதிகளவில் பாதிக்கப்படுகிறது. இங்கு வரும் வெளிநாட்டு பயணிகளும் தற்போது உள்ள இந்த குறுகிய பஸ் நிலையத்தை பார்த்து முகம் சுழிக்கும் நிலை உள்ளது. எனவே கிடப்பில் உள்ள புதிய பஸ் நிலைய திட்டபணிகளை அரசு உடனடியாக தொடங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story