தண்ணீர் பந்தல் அமைப்பதில் அ.தி.மு.க., தினகரன் அணியினர் மோதல்
திருப்போரூரில் தண்ணீர் பந்தல் அமைப்பதில் அ.தி.மு.க., தினகரன் அணியினர் இடையே மோதல் ஏற்பட்டது.
திருப்போரூர்,
திருப்போரூர் பஸ் நிலையம் அருகில் எம்.ஜி.ஆர். சிலை முன்பு தினகரன் அணியினர் பொதுமக்களுக்காக கோடையையொட்டி நேற்று தண்ணீர் பந்தல் அமைத்தனர். வழக்கமாக அந்த இடத்தில் அ.தி.மு.க.வினர் தண்ணீர் பந்தல் அமைப்பது வழக்கம். இதனால் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் குமரவேல் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோர், தினகரன் அணியினர் அமைத்த தண்ணீர் பந்தலை அகற்றினர்.
இதை அறிந்த தினகரன் அணியின் ஒன்றிய செயலாளர் முனுசாமி, நகர செயலாளர் அருள் மற்றும் பலர் அங்கு சென்று அ.தி.மு.க.வினரிடம் வாக்குவாதம் செய்து வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானது.
போலீசார் பேச்சுவார்த்தை
இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருப்போரூர் போலீசார் அங்கு விரைந்து வந்து இரு தரப்பினரிடமும் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் தண்ணீர் பந்தலை முற்றிலுமாக அப்புறப்படுத்தினர்.
ராணுவ தடவாள கண்காட்சிக்கு பிரதமர் வருகை தர உள்ளதால் கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் வாகனங்கள் பழைய மாமல்லபுரம் சாலை வழியாக திருப்பி அனுப்ப உள்ளதாகவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தற்காலிகமாக போடப்படும் பந்தல்கள், கடைகளை அப்புறப்படுத்தி வருவதாகவும் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கூறினார். இதனால் யாரும் தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டாம் என்று பேசி இரு தரப்பினரையும் போலீசார் அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story