அதிகாரிகள் போல நடித்து டேங்கர் லாரி உரிமையாளர்களை மிரட்டி பணம் பறித்த 8 பேர் கைது


அதிகாரிகள் போல நடித்து டேங்கர் லாரி உரிமையாளர்களை மிரட்டி பணம் பறித்த 8 பேர் கைது
x
தினத்தந்தி 31 March 2018 3:12 AM IST (Updated: 31 March 2018 3:12 AM IST)
t-max-icont-min-icon

அதிகாரிகள் போல் நடித்து எண்ணெய் ஏற்றிச்செல்லும் டேங்கர் லாரி உரிமையாளர்களை மிரட்டி பணம் பறித்த 8 பேர் கொண்ட கும்பலை ஊட்டியில் போலீசார் கைது செய்தனர்.

பிராட்வே,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம், சி.பி.சி.எல். போன்ற எண்ணெய் நிறுவனங்களில் இருந்து அதிகளவில் டேங்கர் லாரிகள் எண்ணெய் ஏற்றிச் சென்று வருகின்றன.

கடந்த 3 மாதங்களுக்கு மேலாக இந்த பகுதிகளில் எண்ணெய் ஏற்றிச்செல்லும் டேங்கர் லாரிகளை மர்மநபர்கள், அதிகாரிகள் போல நடித்து, கத்தி மற்றும் துப்பாக்கியை காட்டி மிரட்டி அதன் உரிமையாளர்களிடம் இருந்து பணம் பறித்து வருவதாக மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு புகார்கள் வந்தன.

அவரது உத்தரவின்பேரில் வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் எச்.எம்.ஜெயராம் ஆலோசனையின் பேரில் வடக்கு மண்டல இணை கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா அறிவுரையின்படி துணை கமிஷனர்கள் சேஷாங்சாய், கலைசெல்வன் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் உதவி கமிஷனர் முத்துகுமார், இன்ஸ்பெக்டர் ஜவகர் ஆகியோர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அசோக், விஜயன், நடராஜன் மற்றும் தலைமை காவலர் செந்தில், காவலர்கள் சரவணன், அசோக்குமார், சிவகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு டேங்கர் லாரிகளை மடக்கி பணம் பறிக்கும் கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

ரூ.12 லட்சம் கொள்ளை

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்குன்றம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன்(வயது 48) என்பவர், டேங்கர் லாரியில் சென்ற தன்னை சிலமர்ம நபர்கள் கத்தி மற்றும் துப்பாக்கியை காட்டி மிரட்டி ரூ.12 லட்சம் பறித்து சென்றதாக வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதுதொடர்பாக தனிப்படை போலீசார் விசாரித்தபோது, “லாரிகளில் எடுத்து செல்லும் எண்ணெயின் மதிப்பு பல லட்சம் ரூபாய் என்பதால், மர்மகும்பல் லாரியை மடக்கியதால் தொழில் பாதிக்கும் என்பதால் அவர்கள் கேட்கும் பணத்தை கொடுத்து லாரியை அதன் உரிமையாளர்கள் மீட்டுச்சென்று விடுவது தெரிந்தது.

மேலும் கரிமேட்டை சேர்ந்த பாலாஜி என்ற ஆயில் பாலாஜி(45), முத்தமிழ்நகரைச் சேர்ந்த இம்ரான்(34) ஆகிய 2 பேர் தங்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து, டேங்கர் லாரி உரிமையாளர்களை துப்பாக்கிமுனையில் மிரட்டி பணம் பறிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

ஊட்டியில் 8 பேர் கைது

தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளையர்கள் ஊட்டியில் பதுங்கி இருப்பது தெரிந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் ஊட்டியில் பதுங்கி இருந்த பாலாஜி, இம்ரான் மற்றும் அவர்களது கூட்டாளிகளான அத்திப்பட்டுவை சேர்ந்த சையத் இப்ராகிம்(41), மணலி புது நகரை சேர்ந்த கரிமுல்லா(37), சிவகங்கையை சேர்ந்த கமலராஜன்(32), சேலைவாயலை சேர்ந்த அசோக்குமார்(36), உசிலம்பட்டியை சேர்ந்த ரகு(39), கொடுங்கையூரை சேர்ந்த செந்தில்குமார்(36) ஆகிய 8 பேரையும் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சத்து 5 ஆயிரம், லாரிகளை கடத்த பயன்படுத்திய ஒரு கை துப்பாக்கி, 3 அரிவாள், 4 கத்திகள், 2 கார்கள், 29 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கொள்ளையடிக்கப்பட்ட ரூ.12 லட்சம் பணத்தில் தற்போது ரூ.5 லட்சம் மட்டுமே மீட்கப்பட்டு இருப்பதால் மீதமுள்ள பணம் குறித்தும், இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் கைதான 8 பேரிடமும் தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

போலி அடையாள அட்டைகள்

கைதானவர்களிடம் வக்கீல், வருமான வரித்துறை அதிகாரி, மூத்த புலனாய்வு அதிகாரி, புலனாய்வு இன்ஸ்பெக்டர் மற்றும் பத்திரிகையாளர் போன்ற போலி அடையாள அட்டைகளும், வெளிநாட்டு லத்தி போன்றவைகளையும் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த அடையாள அட்டைகளை வைத்து கொண்டே, லாரி உரிமையாளர்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர். இவர்களுக்கு இந்த அடையாள அட்டைகள் கிடைத்தது எப்படி? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கைதான கொள்ளையர்களுடன் ஊட்டியில் இருந்து சென்னைக்கு போலீசார் வந்த வாகனம் 50 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் அனைவரும் உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story