கொட்டிவாக்கம் பெட்ரோல் நிலையத்தில் வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டு எண்களை திருடிய 2 பேர் கைது


கொட்டிவாக்கம் பெட்ரோல் நிலையத்தில் வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டு எண்களை திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 31 March 2018 3:12 AM IST (Updated: 31 March 2018 3:12 AM IST)
t-max-icont-min-icon

கொட்டிவாக்கத்தில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டு ரகசிய எண்களை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பாலவாக்கத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், கொட்டிவாக்கத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் 11 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றி வருகிறேன். திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்த ஜெயராமன்(வயது 29) என்பவர் பெட்ரோல் போடும் வேலை பார்த்துவந்தார்.

அவரது நடவடிக்கைகள் சந்தேகப்படும்படியாக இருந்ததால் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்தபோது பெட்ரோல் நிரப்பவரும் வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டுகளை வாங்கி ‘ஸ்வைப்’ செய்துவிட்டு, திடீரென வேறு ஒரு கருவி மூலமாக ஏதோ செய்வதை பார்த்தேன். இதுபற்றி விசாரித்தபோது என்னை தாக்கிவிட்டு தப்பி சென்றுவிட்டதாக கூறியிருந்தார்.

கார்டு ரகசிய எண்கள்

இதுபற்றி நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதுதொடர்பாக திருச்சி தென்னூரை சேர்ந்த ஜெயராமன், மாதவரத்தை சேர்ந்த கணேசமூர்த்தி(36) ஆகிய 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், பெட்ரோல், டீசல் போடவரும் வாடிக்கையாளர்கள் வங்கி கார்டு மூலம் பணம் செலுத்தும்போது ஸ்கிம்மர் கருவி மூலம் கார்டு ரகசிய எண்களை கண்டுபிடித்து அதன்மூலம் பணத்தை எடுக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லேப்டாப் மற்றும் ஸ்கிம்மர் கருவி ஆகியவற்றை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story