பூந்தமல்லி தனி கிளை சிறையில் அதிரடி சோதனை இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கு கைதியிடம் செல்போன் சிக்கியது
பூந்தமல்லி தனி கிளை சிறையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
பூந்தமல்லி,
அம்பத்தூரில் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் 16 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விசாரணைக்காக இவர்கள் 16 பேரையும் புழல் சிறையில் இருந்து பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்து சென்றனர். இதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டு வந்ததால் இந்த நீதிமன்ற வளாகத்துக்கு அருகில் செயல்பட்டு வந்த இலங்கை தமிழர் சிறப்பு அகதிகள் முகாம் மூடப்பட்டு, அதனை தனி கிளை சிறையாக மாற்றப்பட்டது.
இதையடுத்து புழல் சிறையில் இருந்த இவர்கள் 16 பேரும் பூந்தமல்லி தனி கிளை சிறைக்கு மாற்றப்பட்டனர். இவர்களோடு வேறு சில வழக்குகளில் தொடர்புடையவர்களும் சேர்த்து மொத்தம் 20-க்கும் மேற்பட்டோர் இந்த தனி கிளை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
செல்போன் சிக்கியது
சிறைக்கு அருகிலேயே சிறப்பு நீதிமன்றம் உள்ளதால் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு, விசாரணை முடிந்ததும் உடனே சிறையில் அடைக்கப்பட்டு விடுவார்கள். இந்த சிறை வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் தனி கிளை சிறையின் கண்காணிப்பாளர் ரமேஷ் நேற்று திடீரென சிறையில் சோதனை மேற்கொண்டார். அப்போது இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் கைதான ராஜா முகமது என்ற கைதியின் அறையில் சோதனை செய்தபோது, அங்கிருந்து ஒரு செல்போனை பறிமுதல் செய்தார்.
அந்த செல்போன் அவருக்கு எப்படி கிடைத்தது?, அதன் மூலம் அவர் யாரிடம் எல்லாம் சிறையில் இருந்தே பேசி உள்ளார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த டிசம்பர் மாதம் இதே சிறையில் கைதிகளிடம் இருந்து செல்போன், சார்ஜர், ‘புளூ-டூத்’ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story