பா.ம.க.வினர் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம்


பா.ம.க.வினர் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம்
x
தினத்தந்தி 31 March 2018 3:25 AM IST (Updated: 31 March 2018 3:25 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து பா.ம.க.வினர் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு செய்த துரோகத்தை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும் முதல் கட்டமாக 30-ந் தேதி முதல் கோரிக்கை நிறைவேறும் வரை தமிழக மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டத்தை நடத்தும்படி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்திருந்தார்.

அதன்படி வேலூர் மாவட்டத்திலும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்தும் பா.ம.க.வினர் தங்கள் வீடுகள், கடைகள், பொது இடங்களில் கருப்பு கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

வேலூர், காகிதப்பட்டறை, சத்துவாச்சாரி, வள்ளலார், ரங்காபுரம், அலமேலுமங்காபுரம், சேண்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் பா.ம.க.வினர் வீடுகளில் கருப்பு கொடி கட்டி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கக்கோரி போராட்டம் நடத்தினர். அதேபோன்று கடைகள், மின்கம்பங்கள், பொதுஇடங்களிலும் கருப்புக்கொடியை கட்டினர்.

நிகழ்ச்சியில் பா.ம.க. மாநில துணை பொதுச் செயலாளர் இளவழகன், முன்னாள் மத்தியமந்திரி என்.டி.சண்முகம், மாவட்ட துணை செயலாளர் சரவணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் ஆம்பூர், அரக்கோணம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பா.ம.க.வினர் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story