செல்போன் கோபுரத்தில் ஏறி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம், 26 பேர் கைது


செல்போன் கோபுரத்தில் ஏறி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம், 26 பேர் கைது
x
தினத்தந்தி 31 March 2018 4:15 AM IST (Updated: 31 March 2018 4:04 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக 26 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தினர். அதன்படி கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்த் தலைமையில் கட்சி நிர்வாகிகள் நேற்று காலை கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடி அருகே உள்ள செல்போன் கோபுரத்தில் 30 அடி உயரத்தில் ஏறி நின்று போராட்டம் நடத்தினர். இது பற்றிய தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து செல்போன் கோபுரத்தில் ஏறி நின்று போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் ஆனந்த், மாநில மாணவர் அணி செயலாளர் அருள்பாபு உள்ளிட்ட 11 பேரை கைது செய்தனர்.

இதேபோல் வடலூரில் வடலூர் நகர செயலாளர் குமரவேல் தலைமையில் கட்சி நிர்வாகிகள் வடலூர் 4 முனை சந்திப்பு அருகே உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார்கள். இது பற்றி தகவல் அறிந்து வந்த வடலூர் போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. சிதம்பரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளர் முடிவண்ணன் தலைமையில் வண்டிகேட் அருகில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி நின்று கட்சி நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர். இது பற்றிய தகவல் அறிந்து வந்த சிதம்பரம் டவுன் போலீசார் போராட்டம் நடத்திய முடிவண்ணன் உள்பட 5 பேரையும் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த மாநில செயற்குழு உறுப்பினர் அந்தோணிதாஸ் தலைமையில் அக்கட்சியை சேர்ந்தவர்கள் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்ததும் குஜிலியம்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாநில செயற்குழு உறுப்பினர் அந்தோணிதாஸ் உள்பட 10 பேரை கைது செய்து போலீசார் அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். 

Next Story