ஜெயலலிதா மரணம் குறித்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை திருப்திகரமாக இல்லை - ஜெ.தீபா பேட்டி


ஜெயலலிதா மரணம் குறித்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை திருப்திகரமாக இல்லை - ஜெ.தீபா பேட்டி
x
தினத்தந்தி 31 March 2018 4:45 AM IST (Updated: 31 March 2018 4:04 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை திருப்திகரமாக இல்லை என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா ஆண்டிப்பட்டியில் தெரிவித்தார்.

ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் எம்.ஜி.ஆர்.அம்மா தீபா பேரவை சார்பில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் ஜெ.தீபா கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய, மாநில அரசுகள் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பையே அவமதிப்பு செய்திருக்கிறார்கள். மத்திய அரசு ஆணைப்படி தான் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இது தமிழகத்திற்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம் என்று நவநீதகிருஷ்ணன் எம்.பி. தான் கூறியுள்ளாரே தவிர, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த வேறு யாரும் கூறவில்லை.

தமிழக அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சினை மட்டுமில்லை, தேனி மாவட்டம், குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்து பிரச்சினையில் கூட சரிவர செயல்படவில்லை. இதேபோல ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளிலும் மக்கள் தாமாக முன்வந்து போராடினால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்ற சூழ்நிலை தற்போது தமிழகத்தில் நிலவுகிறது.

மக்கள் பிரச்சினையில் அரசும், எந்த ஒரு கட்சியும் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே உண்மை. ஜெயலலிதா மரணத்தில் சதி இருப்பது மிகத்தெளிவாக தெரிகிறது.

விசாரணை ஆணையம் உள்ளிட்ட எந்தவிதமான விசாரணையிலும் அவர் இயற்கையாக மரணிக்கவில்லை என்பது தெரிகிறது.

தற்போது இருக்கும் சூழ்நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூடவேண்டும். ஏனெனில் மக்கள் விருப்பம் எதுவோ அதைத்தான் அரசு செய்ய வேண்டும். ஜெயலலிதா இருந்தால் இதுபோன்ற நிலை தமிழகத்திற்கு ஏற்பட்டு இருக்காது. அவர் உயிரை கொடுத்து கூட மக்களை காப்பாற்றி இருப்பார். மக்களுக்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தவர். அவர் மீது தொடுக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் சசிகலா குடும்பத்தினர் மட்டுமே பொறுப்பேற்க வேண்டும்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு டி.டி.வி.தினகரன், தமிழகம் சோமாலியா போல மாறிவிடும் என்று கூறினார். அதுதான் உண்மை. ஆனால் அதற்கு காரணமே அவர்கள் தான். இவர்கள் கொள்ளை அடித்தார்கள். ஜெயலலிதாவை ஏமாற்றினார்கள். இதனால் மக்களுக்கு சேரவேண்டிய திட்டங்கள் எதுவும் செல்லவில்லை. ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் என்னிடம் கூறி வருகின்றனர். அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் எனக்கு மகிழ்ச்சியே.

டி.டி.வி.தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அவருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை. அவர்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் அவர்களை முன்னிலைபடுத்தவே செய்யப்படுகிறது. ஜெயலலிதா இருந்திருந்தால் டி.டி.வி.தினகரன் என்ற பெயரே இன்றைய அரசியலில் இருந்திருக்காது.

ஜெயலலிதா இறப்பு குறித்து விசாரணை கமிஷன் தலைவர் ஆறுமுகசாமி நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் அவருக்கு யாரும் ஆதரவு அளிக்கவில்லை. தமிழக அரசுகூட அதற்கு தடையாகத்தான் உள்ளது. அரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பலரும் இதில் விசாரிக்கப்பட வேண்டும். ஆனால் அவர்களை விசாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விசாரணை நேர்மையாக நடக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விசாரணைக்கு ஒருநபர் போதாது. நடுநிலையானவர்களை வைத்து விசாரணையை நடத்த வேண்டும். தற்போது நடைபெறும் விசாரணை எனக்கு திருப்திகரமாக இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Tags :
Next Story