குறுக்கு வழியில் ஆட்சிக்கு வர துடிக்கும் ரங்கசாமியின் பகல் கனவு பலிக்காது - நாராயணசாமி கடும் தாக்கு


குறுக்கு வழியில் ஆட்சிக்கு வர துடிக்கும் ரங்கசாமியின் பகல் கனவு பலிக்காது - நாராயணசாமி கடும் தாக்கு
x
தினத்தந்தி 31 March 2018 5:15 AM IST (Updated: 31 March 2018 5:11 AM IST)
t-max-icont-min-icon

காவிரி பிரச்சினையில், மக்களைப்பற்றி கவலைப்படாமல் குறுக்கு வழியில் ஆட்சிக்கு வர துடிக்கும் ரங்கசாமியின் பகல் கனவு பலிக்காது என்று நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

முதல்-அமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம் ஆகியோர் டெல்லி சென்று விட்டு புதுச்சேரிக்கு திரும்பினர். இந்தநிலையில் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அமைச்சர் நமச்சிவாயம், முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. ஆகியோருடன் டெல்லி சென்று இருந்தேன். அங்கு புதுவை அரசியல் நிலவரம், அரசின் செயல்பாடு குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களிடம் விளக்கினோம். அதன்பின் நானும் அமைச்சர் நமச்சிவாயமும் ராகுல்காந்தியை சந்தித்துப் பேசினோம்.

இந்த விவகாரத்தை அவர் கவனமாக கேட்டார். இந்த பிரச்சினையில் அடுத்தகட்டமாக நாங்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதை எங்கள் கட்சி தலைமை தெரிவிக்கும். அதன்படி நாங்கள் செயல்படுவோம்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி இருந்தாலும் காவிரி பிரச்சினையில் புதுவை மாநில மக்களின் உரிமையை விட்டுகொடுக்கமாட்டோம். எங்களுக்கு காரைக்கால் விவசாயிகள் நலன்தான் முக்கியம்.

ஆனால் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக செயல்படவில்லை. என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமிக்கு சட்டமன்றம் வந்துவிட்டு ஒருசில நிமிடங்களில் வெளிநடப்பு செய்வதுதான் வேலை. அவர்களை பொறுத்தவரை குறுக்கு வழியில் ஆட்சிக்கு வர துடிக்கிறார்கள். அது பகல் கனவாகவே முடியும். என்ன ஜாலம் செய்தாலும் அவர்களது ஜம்பம் பலிக்காது. சட்டத்தை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாது.

சட்டசபையில் காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் ஒருமனதாக இருந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினோம்.

ஆனால் என்.ஆர்.காங்கிரசுக்கு இதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை. மக்கள் மீதோ காரைக்கால் விவசாயிகளின் நலனை பற்றியோ அவர்களுக்கு அக்கறை கிடையாது. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் பதவி, முதல்-அமைச்சர் நாற்காலி வேண்டும். அதைத்தவிர அவர்களிடம் வேறு நோக்கம் இல்லை.


தேர்தலில் மக்கள் அவர்களை புறக்கணித்தபின் எதிர்க்கட்சிக்குரிய வேலையை அவர்கள் செய்ய வேண்டும். அதை விட்டு விட்டு மற்ற கட்சி எம்.எல்.ஏ.க்களை பிடித்து குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயற்சிக்கிறார்கள். இதற்கே அவர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யவேண்டும். என்ன முயற்சி எடுத்தாலும் அவர் களது எண்ணம் நிறைவேறப்போவது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து நாராயணசாமியிடம் நிருபர்கள், ‘புதுவை அரசை முடக்க வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகிறதே?’ என்று கேட்டதற்கு, ‘பத்திரிகைகளில் வரும் செய்திகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை. இப்போதுகூட பாராளுமன்றத்தை நடத்த முடியவில்லை. அதற்காக எமர்ஜென்சியை (நெருக்கடி நிலை) கொண்டுவர முடியுமா? சபாநாயகர் ஒரு உத்தரவு போட்டால் அதை மதிக்கவேண்டும். அது தவறு என்றால் கோர்ட்டிற்கு போகவேண்டும். சபாநாயகர் வாதியாக சேர்க்கப்படாத வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அவரை எப்படி கட்டுப்படுத்த முடியும்? இதுதான் அடிப்படை தத்துவம்’ என்று பதில் அளித்தார். 

Next Story