பகவதியம்மன் கோவில் தேரில் பொருத்த தங்கம் உருக்கும் பணி பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு


பகவதியம்மன் கோவில் தேரில் பொருத்த தங்கம் உருக்கும் பணி பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு
x
தினத்தந்தி 1 April 2018 4:00 AM IST (Updated: 1 April 2018 12:08 AM IST)
t-max-icont-min-icon

மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் தங்க தேரில் பொருத்த தங்கம் உருக்கும் பணி நடந்தது. இதில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

மணவாளக்குறிச்சி,

குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இங்கு பெண்கள் இருமுடிகட்டி வந்து வழிபடுவதால், பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. மாசி திருவிழாவின் போது, அம்மன் வெள்ளிப்பல்லக்கில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.

இங்கு ரூ.7 கோடி மதிப்பில் தங்கத்தேர் செய்ய கோவில் நிர்வாகம் கடந்த ஆகஸ்டு மாதம் முடிவு செய்தது. இதில் பக்தர்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என கருதி தங்க தேருக்கான தங்கம் அல்லது பணம் நன்கொடையாக அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. பக்தர்கள் நன்கொடை அளிப்பதற்கு வசதியாக கடந்த ஆகஸ்டு மாதம் நன்கொடை வசூல் முகாம் நடந்தது. இதையடுத்து தேர் செய்யும் பணி கடந்த 7 மாதங்களாக நடந்து வந்தது. மைலாடி ஸ்தபதி கல்யாணசுந்தரம் தேரை வடிவமைத்து வருகிறார். 12¾ அடி உயரத்தில் தேர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மேல் 350 கிலோ எடையில் செம்பு தகடு பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் தேரில் தங்கம் பொருத்த தங்கம் உருக்கும் பணி நேற்று காலை மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் நடந்தது. இதில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரமம் சுவாமி கருணானந்த மகாராஜ், கோவில் நிர்வாக கண்காணிப்பாளர் ஜீவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த தங்கத்தேர் குறித்து அம்மன் கோல்டன் சாரிட்டபிள் தலைவர் ரெகுபதி ராகவ ராஜாராம், கோட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் பிரஷோபகுமார் ஆகியோர் கூறியதாவது:–

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தங்கத்தேர் அமைப்பதற்காக நடைபெற்ற நன்கொடை வசூல் முகாமில் ரூ.13 லட்சம் , 13 பவுன் தங்கம் வசூலாகியது. கேரள மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பக்தர்கள் நன்கொடை அளித்துள்ளனர்.

தேருக்கு 10 கிலோ தங்கம் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தேரை சுற்றி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள முக்கிய அம்மன் கோவில்களின் 34 அம்மன் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

தேர் அமைக்கும் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு வருகிற சித்திரை பவுர்ணமியன்று கோவிலில் ஒப்படைக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, தேரை நிறுத்துவதற்கு கோவில் மேற்கு பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கொட்டகை அமைக்கும் பணியை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில் கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story