தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் மத்திய அரசு திட்டங்களை அறிவித்து வருகிறது தென்காசி பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேச்சு


தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் மத்திய அரசு திட்டங்களை அறிவித்து வருகிறது தென்காசி பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 1 April 2018 3:00 AM IST (Updated: 1 April 2018 12:19 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று தென்காசியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. கூறினார்.

தென்காசி,

தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று தென்காசியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. கூறினார்.

பொதுக்கூட்டம்


தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க. மற்றும் தென்காசி நகர கிளை சார்பில் தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு நெல்லை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ஷேக் தாவூது முன்னிலை வகித்தார். தென்காசி நகர செயலாளர் சாதிர் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் தி.மு.க. மகளிரணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

காவிரி மேலாண்மை வாரியம்

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பல்வேறு மாவட்டங்களில் எழுச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவை இளைஞர்களின் எழுச்சிநாள் விழாவாக தி.மு.க.வினர் கொண்டாடி வருகிறார்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். ஆளும்கட்சியினர் கூட இதுபோன்று ஒரு கடிதம் எழுதவில்லை. ஒவ்வொரு நாளும் எப்படியாவது ஆட்சியை நடத்திக் கொண்டு செல்ல வேண்டும் என்றுதான் அ.தி.மு.க.வினர் விரும்புகிறார்கள். தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்து வெற்றி பெறலாம் என்று நினைக்கிறார்கள். அவர்கள் நினைப்பது தவறு.

மத்திய அரசு வஞ்சிக்கிறது


மத்திய அரசுக்கு ஆதரவாக ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள். இதை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மத்திய அரசு தமிழக மக்களை வஞ்சிக்கும் வகையில் திட்டங்களை அறிவித்து வருகிறது. மீத்தேன் எரிவாயு திட்டம், நியூட்ரினோ திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் தமிழக மக்களுக்கு எதிரானவை. மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் வகையில் திட்டங்களை அறிவித்து வருகிறது. இதற்கு அ.தி.மு.க. அரசு துணை போகிறது.

தி.மு.க. ஆட்சி காலத்தில் மக்களுக்கு தேவையான எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு கூட இந்த அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. நிறைவேற்றப்பட்ட திட்டங்களை செயல்படுத்த அனுமதிக்கவில்லை. எந்த பிரச்சினை என்றாலும் மக்கள் போராடி வெற்றி பெற வேண்டிய சூழ்நிலை உள்ளது.

தி.மு.க. ஆட்சி


ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள். இந்த ஆலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்கள் அரசிடம் தெரிவித்து உள்ளனர். அப்படி இருந்தும் அரசு கண்டுகொள்ளவில்லை. இந்த நிலை மாற வேண்டும் என்றால் தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சி மலர வேண்டும். இதற்கு நீங்கள் ஒற்றுமையாக இருந்து உழைக்க வேண்டும்.

இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.

பின்னர் அவர் விழா மேடையில் கல்வி உதவித்தொகை உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கூட்டத்தில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வகாப், டி.பி.எம்.மைதீன்கான் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. தங்கவேலு, மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் ரசாக், இளைஞர் அணி செயலாளர் செரீப், தொழில்அதிபர் ஆர்.கே.காளிதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story